

லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனை யின்படி முதல்வர் ஜெயலலிதா வுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள், எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, 3-வது முறையாக சென்னை வந்துள்ள லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னா, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினரும் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களின் ஆலோசனைப்படி அப்போலோ டாக்டர்கள் குழுவினரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து, அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட சிகிச்சை முறைகள் குறித்து ரிச்சர்டு பீலேவுடன் எய்ம்ஸ் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் பிசியோதெரபி மருத் துவர்கள் நேற்று மருத்துவ மனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் இதுவரை முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி விளக்கப் பட்டது. இதையடுத்து பெண் மருத்துவர்கள் இருவரும் முதல் வருக்கு எளிதான பிசியோதெரபி சிகிச்சைகளை அளித்தனர். அத்துடன் மற்ற வழக்கமான சிகிச்சைகளையும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து அளித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரே நேரத்தில் வழிபாடு
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் ஒரே நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.