அச்சக ஊழியர் கொலை: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கைது

அச்சக ஊழியர் கொலை: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ராம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த வர் நாகராஜ்(35). இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதேபோல், நாகராஜ் வீட்டின் பின்புறம் உள்ள 3-வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார்.

இந்நிலையில், சீனிவாசன் வீட்டின் பின்புறம் பல நாட்களாக நாகராஜ் சிறுநீர் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசியதால் சீனிவாசன் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சீனிவாசனுக்கும், நாகராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி சீனிவாசன் வீட்டின் பின்புறம் நாகராஜ் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் விளைவாக, சீனிவாசன் இரும்புக் கம்பியால், நாகராஜை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார், திருநின்றவூர் பகுதியில் பதுங்கியிருந்த வழக்கறிஞர் சீனிவாசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in