Published : 01 Sep 2022 12:49 PM
Last Updated : 01 Sep 2022 12:49 PM

அரசு விளம்பரங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

சென்னை: அரசு இணையதளங்கள், விளம்பரங்களில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கை செப்டம்பர் 23-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "கட் அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல். இதுபோன்று மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வரலாற்றை திரிப்பதுடன், மற்ற முதல்வர்கள் பங்களிப்பை மறைமுகமாக குறைத்து மதிப்பிட வழி வகுத்து விடும். எனவே, அரசு இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

மேலும், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x