

சென்னை: "விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாததன் மூலம், தமிழகத்தில் அவர்தான் மத அரசியல் செய்கிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் முதன்முறையாக விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்த அரசு எது? வரலாற்றை புரட்டிப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.விநாயகர் சதுர்த்திக்கு முதன்முறையாக விடுமுறை அறிவித்தது திமுக அரசு, அப்போதைய முதல்வர் அண்ணா தான் அந்த அறிவிப்பை வெளியிட்டவர்.
இன்று திமுக, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையிலிருந்து எந்தளவுக்கு மாறியிருக்கிறது என்பதற்கு நமது முதல்வர் வாழ்த்து சொல்லாதது, திமுகவைச் சாரந்த ஒரு எம்.பி. இந்துசமய அறநிலையத்துறை அவர்களுடைய துறை சார்ந்து வாழ்த்து தெரிவித்ததற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்மூலம் அண்ணா வழியில் வரக்கூடிய இந்த ஆட்சி எந்தளவுக்கு விலகியிருக்கிறது என்பது தெரிகிறது. இந்துசமய அறநிலையத்துறை வாழ்த்து தெரிவித்திருப்பது எந்தவிதத்திலும் தவறு கிடையாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறியிருக்க வேண்டும். காரணம் தமிழகத்தின் முதல்வராக அவர் தெரிவிக்கும் வாழ்த்து அனைவருக்கும் பொருந்தும்.
பாஜக பண்டிகைகளைப் பொருத்தவரை இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. வாழ்த்து சொல்வதால், பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அந்த பண்டிகைகளின் மீது ஒரு பாந்தம் வருகிறது. இதனை முதல்வர் நேற்று செய்ய தவறியிருக்கிறார். இந்துசமய அறநிலையத்துறை வாழ்த்து கூறியதை திமுக எம்.பி. குறை கூறியிருப்பது அதைவிட பெரிய தவறு.
ஒரு முதல்வர் எல்லா மதத்தினரையும் எல்லா சமய மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறமாட்டேன் என்ற அவர்களுடைய நிலைப்பாடு முதல்வராக பொறுப்பேற்கும் போது அரசியலமைப்பின் மீது கைவைத்து அனைத்து மதத்தினைரையும் ஒன்றாக பார்ப்பேன் என்று கூறியதற்கு எதிரானது.
வாழ்த்து சொல்வது அரசியல் கிடையாது. வாழ்த்து சொல்வதால், இந்த சமுதாயத்தில் இருக்கின்ற ஒற்றுமை இன்னும் மேலோங்கிச் செல்கிறது. ஆனால் , முதல்வரே வாழ்த்து சொல்லாதபோது, தமிழகத்தில் அவர்தான் மத அரசியல் செய்கிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகிறது" என்றார்.