

கூடுதலாக 1,120 பேரை ஈடுபடுத்தி அப்புறப்படுத்தியது மாநகராட்சி
சென்னை நகரில் தீபாவளி கொண் டாட்டத்தினால் குவிந்த 91 டன் பட்டாசு குப்பை உள்பட 4,891 டன் குப்பையை கூடுதலாக 1,120 துப்புரவு பணியாளர்களை பணியமர்த்தி மாநகராட்சி அதிகாரி கள் அப்புறப்படுத்தினர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப் பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பெறுவது பட்டாசுகள்தான். தீபா வளி தினத்தன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். அந்த வகையில், சென்னைவாசிகள் சனிக்கிழமை அன்று காலை தொடங்கி இரவு வரை பட்டாசு வெடித்து தீபாவளியை விமரிசையாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னை நகரில் தெருக்கள், சந்துகள் மற்றும் சாலைகளில் பட்டாசு குப்பை குவிந்தது. வழக்கமாக தினமும் ஏறத்தாழ 4,800 டன் குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். தீபாவளியை ஒட்டி சனிக்கிழமை கூடுதலாக 91 டன் பட்டாசு குப்பை சேர்ந்ததால் 4,891 டன் அளவுக்கு சேர்ந்த குப்பை இரவுக்குள் அகற்றப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநக ராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் கூடு தலாக குப்பை குவியும். இதற் காக வழக்கமான துப்புரவு பணி யாளர்களுடன் கூடுதலாக 1,120 பணியாளர்களும், கூடுதலாக 12 குப்பை லாரிகளும் குப்பை அகற் றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சனிக்கிழமை இரவுக்குள் 4,891.22 டன் குப்பை அகற்றப்பட்டது. இதில் பட்டாசு குப்பை மட்டும் 91 டன் அளவுக்கு இருக்கும். ஞாயிற்றுக்கிழமையும் பட்டாசு கள் வெடிக்கப்பட்டன அந்த பட் டாசு குப்பையும் விரைவாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின் றன” என்று தெரிவித்தார்.
காற்று, ஒலி மாசு அதிகரிப்பு
தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட காற்று, ஒலி மாசுபாடு அதிகரித்திருந்தது. இருப்பினும், கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் காற்று மாசின் அளவு நடப்பாண்டு 7 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு காரணிகளின் அளவு கடந்த 2014-ம் ஆண்டைவிட 7 முதல் 40 சதவீதம் வரை 2016-ம் ஆண்டு குறைந்துள்ளது.
ஒலி மாசு, பகல் நேரத்தில் அதிகபட்சமாக 55 டெசிபல் அளவும்; இரவில் 45 டெசிபல் அளவும் இருக்கலாம். ஆனால், திருவல்லிக்கேணியில் தீபாவளிக்கு முன்பு 73 டெசிபல் என்றிருந்த ஒலி அளவு, தீபாவளியன்று 88 டெசிபல் ஆக உயர்ந்தது. பெசன்ட்நகரில் 56-ல் இருந்து 72-ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 67-ல் இருந்து 81-ஆகவும், சவுகார்பேட்டையில் 63-ல் இருந்து 80-ஆகவும், தியாகராயநகரில் 59-ல் இருந்து 81 ஆகவும் ஒலி அளவு உயர்ந்திருந்தது.