திருச்சி | ராகுல் காந்தியின் நடைபயணத்தையொட்டி தமிழகம் முழுவதும் செப். 3-ல் உண்டியல் ஏந்தி நிதி வசூல்: கே.எஸ்.அழகிரி

திருச்சியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன், எம்.பி. சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன், எம்.பி. சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருச்சி: ராகுல் காந்தியின் நடைபயணத்தை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் செப்.3-ம் தேதி உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்.7-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமைநடைபயணத்தைத் தொடங்குகிறார். இதுதொடர்பாக திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி,செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி செப்.7-ம் தேதிகன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

இந்த நடைபயணத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக செப்.3-ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் கட்சி நிர்வாகிகள் உண்டியல் ஏந்தி நிதி வசூலிப்பர். பணம் திரட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. உண்டியல் ஏந்துவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே நோக்கம்.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே செல்லும்போது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றுள்ளார். தகுதியில்லாத கட்சியில் அவர் ஏன் இவ்வளவு காலம் இருந்தார் எனத் தெரியவில்லை.

அரசியலில் ஒரு இயக்கம் வெற்றிபெறுவதும், பின்னடைவு காண்பதும் இயல்பானது. காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தவறுகளைச் சுட்டிக் காட்டினால் முதல்வர் உடனடியாக சரிசெய்து விடுகிறார்.

சென்னை பரந்தூரில் புதிய விமானநிலையம் வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.முந்தைய காலத்தில் தென்னிந்தியாவின் விமான போக்குவரத்தில் சென்னைதான் முதலிடத்தில் இருந்தது. தற்போது பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்கள் சென்னையைவிட முன்னேறிவிட்டன. எனவே, வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. அதேநேரம், இத்திட்டத்துக்காக நிலத்தை இழப்பவர்களுக்கு 20 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

பேட்டியின்போது எம்.பி. சு.திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, செல்வப்பெருந்தகை, கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in