3 சமுதாய நல மையங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள்; சாலை பள்ளங்களை மூட ரூ.3 கோடி ஒதுக்கீடு: சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை ரூ.3 கோடி செலவில் சரிசெய்வது உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நேற்றுநடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மாமன்றகூட்டம் ரிப்பன் மளிகையில் நேற்றுநடைபெற்றது. மேயர் ஆர்.பிரியாதலைமை தாங்கினார்.துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர்ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலம் இளங்கோநகர், அம்பத்தூர் பாடி, செம்மஞ்சேரி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நல மையங்களில் தொண்டு நிறுவனம் மூலம்ரத்த சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருணாநிதி சிலைக்கு அனுமதி

மேலும் மூலக்கொத்தளம் மயானத்தில் ரூ.2 கோடியே 74 லட்சத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கவும், கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி மகளிர் பள்ளிகளில், பொது இடங்களில் மகளிர் பாதுகாப்பு - நிர்பயா திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 76 லட்சத்தில் கழிப்பறைகள் கட்டவும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை ரூ.3 கோடியில் சரி செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுமட்டுமின்றி சைதாப்பேட்டையில் 142-வது வார்டு பஜார் சாலை- அண்ணா சாலைசந்திப்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு சிலை வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

மதிமுக கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு

இக்கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 35-வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசும்போது, "தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மாநகராட்சியிடம் பெறும் அனுமதியை விட பல மடங்கு கூடுதல் நீளத்துக்கு கேபிள்களை பதிக்கின்றன. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் பேச இருக்கிறேன் என்று சிலரிடம் கூறினேன். அப்படி பேசினால் சிறையில் இருந்து மிரட்டல் போன் வரும் என்று எச்சரிக்கின்றனர்" என்றார்.

இதனால் மன்ற கூட்டத்தில் அமர்ந்திருந்த கவுன்சிலர்கள் மற்றும்உயரதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். அதனால் மன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர் ஜீவன், "இது மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு நடப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆணையர் தலையிட்டு, சரியான வாடகையை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்" என்றார்.

பின்னர், 63-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சிவ.ராஜசேகரன் பேசும்போது, "எனது வார்டான புதுப்பேட்டையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை, பழைய கனரக வாகன இயந்திரங்களை உடைக்கும் பணிகளை நீண்ட காலமாக செய்துவருகின்றனர்.

பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர்களுக்கு செங்கல்பட்டு அடுத்த ஆப்பூரில் ஆட்டோ நகர் அமைக்கப்பட்டது. அங்கு சிலருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்களுக்கும் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in