

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள பந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சிகள் கள ஆய்வு செய்து வருவதால் போராட்டம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில்2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்தவிமான நிலையத்துக்காக சுமார்4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தும்போது பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் உட்பட பல கிராமங்களில் இருந்தும் நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.
இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பலர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். மேலும் பலர் கால்நடை வளர்ப்பவர்கள். நிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி இருக்கும். மேலும் மேய்கால் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட இருப்பதால் கால்நடைகளும் அதனை வளர்ப்போரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நிலம் கையகப்படுத்தலுக்கு உள்ளாகும் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி இருந்தனர். இதையடுத்து அடுத்தடுத்த கிராமங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த பாமக, அக்கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்காக கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 7 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் கள ஆய்வு நடத்த உள்ளனர்.
கட்சிகள் வருகை
ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் நிர்வாகிகள், இப்பகுதி மக்களை சந்தித்ததுடன், இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைவதற்கு ஏதிராக போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பிலும் நேற்று பரந்தூர் பகுதியில் கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நாயனார் தலைமையில் மாவட்டச் செயலர் சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு உள்ளிட்டோர் இந்த கள ஆய்வில் பங்கேற்றனர்.
ஏற்கெனவே அந்தப் பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுதல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஆய்வுக்குச் செல்வது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளபகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை சந்தித்து அரசியல் கட்சிகள் போராட்டத்துக்கு திட்டமிடலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.