Published : 31 Aug 2022 06:20 AM
Last Updated : 31 Aug 2022 06:20 AM
சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜாதோட்டம் திட்டப்பகுதியில், மறு குடியமர்வு செய்யப்பட உள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு தலா ரூ.24 ஆயிரம் கருணைத் தொகை, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ராஜா தோட்டம் பகுதியில் கடந்த 1974-75-ம்ஆண்டு 280 சதுர அடியில் கட்டப்பட்ட 84 அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து,இந்த 84 குடியிருப்புகளையும் இடித்துவிட்டு அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் புதிதாக 400 சதுர அடியில் தூண்தளம் மற்றும் 9 அடுக்கு மாடிகளுடன் 162 குடியிருப்புகள் ரூ.24.30 கோடியில் கட்டப்பட உள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படும். இதில்ரூ.7 லட்சம் அரசு மானியமாகவும், ரூ.6.09 லட்சம் மாநில அரசின் உட்கட்டமைப்பு நிதியாகவும், ரூ.1.50 லட்சம் மத்திய அரசு மானியமாகவும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும்பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.250 வீதம் 20 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். அல்லது ஒரே தவணையாக ரூ.41 ஆயிரம் செலுத்தும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடியில் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 300 லிட்டர்கொள்ளவு கொண்ட கான்கிரீட் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும். இந்நிலையில், ராஜாதோட்டம் திட்டப்பகுதியில் வசித்த84 பேரும் அதே பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த குடியிருப்புதாரர்களுக்கு ஏற்கெனவே உயர்த்தி அறிவித்தபடி தலா ரூ.24 ஆயிரம் கருணைத் தொகை மற்றும் தற்காலிகஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம்அலுவலகத்தில் வழங்கினார். கருணைத் தொகையின் மொத்தமதிப்பு ரூ.20.16 லட்சமாகும்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி.,வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா,தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய மேலாண்இயக்குநர் ம.கோவிந்த ராவ் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT