கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தை: பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தை: பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
Updated on
1 min read

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில் பூஜை பொருட்களை வாங்க நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.

கோயம்பேடு சந்தை நிர்வாக குழு சார்பில், பண்டிகைக் காலங்களில் அனைத்து வகையான பூஜை பொருட்களும் ஒரே இடத்தில் மலிவு விலையில் கிடைப்பதற்காக கோயம்பேடு மலர் சந்தைவளாகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகையின்போது சிறப்பு சந்தைகள் திறக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு, கடந்தஒரு வாரமாக சிறப்பு சந்தைதிறக்கப்பட்டு உள்ளது. இது இன்றுடன் முடிவடைகிறது.

அதனால் கூட்ட நெரிசலைத்தவிர்க்க நேற்றே பொதுமக்கள்பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் ரூ.750 வரையும், சிலைக்கான குடை ரூ.10 முதல்ரூ.50 வரையும் விற்கப்படுகின்றன.

மேலும் ஒரு தேங்காய் ரூ.15 முதல் ரூ.30 வரை, 20 கம்பு கதிர்கள் கொண்ட கட்டு ரூ.60, 5 தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.15, வாழை இலை ரூ.10, பூசணிக்காய் ரூ.50, மக்காச்சோளக் கதிர் ரூ.15, அருகம்புல் ஒரு கட்டு ரூ.30,மாவிலைக் கொத்து ரூ.20, துளசிகட்டு ரூ.10, இரு வாழைக்கன்றுரூ.50, எருக்கம் பூ மாலை ரூ.20,சாமந்திப்பூ முழம் ரூ.30, கதம்பப் பூ முழம் ரூ.40, மல்லிகைப்பூ முழம்ரூ.80, கனகாம்பரம் பூ முழம் ரூ.50,ஒரு படி பொரி ரூ.15, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.40, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120, ஆப்பிள் கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரை, சாத்துக்குடி ரூ.40, விளாம்பழம் ரூ.50, ஒருசீப்பு வாழைப்பழம் ரூ.75, மாதுளைரூ.120, 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.400, ஒரு கரும்பு ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஜாம் பஜார், பெரம்பூர், அரும்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பூஜை பொருட்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in