Published : 31 Aug 2022 04:35 AM
Last Updated : 31 Aug 2022 04:35 AM
அரிசி வழங்க மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வந்த பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பதில் அளித்தார் ஆனால் முதல்வர் ரங்கசாமியோ, இதில் குழப்பமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. கடைகள் மூடப்பட்டு, ‘அரிசிக்குப் பதில் பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம்’ என்ற திட்டம் தொடக்கத்தில் கொண்டு வரப்பட்டு, தற்போது அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இச்சூழலில், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பிறகு, புதுச்சேரி சட்டப்பேரவையில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் இதுதொடர்பாக பேசியதாவது:
ஏம்பலம் வில்லியனூரில் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கிளை திறக்கப்படும். வசதி படைத்தவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ‘க்ரீன் கார்டு’ கொடுக்கப்படும். ரேஷன் கடை மீண்டும் திறக்கப்படும். மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அரிசி வழங்கப்படும். நுகர்வோர் விவகாரங்கள் குறித்த வழக்குகளை துரிதமாக விசாரித்து தீர்ப்பு வழங்க லாஸ்பேட்டையில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
ரேஷன் கார்டு சேவைகளை கணினி மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் 2-ம் தேதி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், என் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களின் குறைகள் கேட்டறியப்படும். அந்த மாதத்திலேயே அக்குறைகள் களையப்படும். பாப்ஸ்கோ நிர்வாககுளறுபடிகளை களைந்து தேவையான ஆட்களை கொண்டு பாப்ஸ்கோவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி பஜார், பொங்கல் பரிசு போன்றவை சிறப்பாக செயல்படுத்தப்படும்.
தீயணைப்புத் துறை
தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். கூடுதலாக 3 உதவி கோட்ட பணியிடங்கள் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
3 கோடி செலவில் கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் கோட்ட தீயணைப்பு அலுவலகம் கட்டப்படும். கோரிமேடு, மடுகரை, பாகூர், வில்லியனூர், காலாப்பட்டு, காரைக்கால் தூவாக்குடி, மாகே, ஏனாம் பகுதிகளில் அதிநவீன கருவிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனங்கள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தவளக்குப்பத்தில் தீயணைப்பு நிலையம் கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
2 முன்னணி தீயணைப்பு வீரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பேரிடர் காலம், தேர்தல் காலங்களில் பணியாற்ற பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மையினருக்கு மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டங்களை செயல்படுத்த 3 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். புதுவை அரசு நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 50 சுய உதவி குழுக்களுககு 50 லட்சம் செலவில் உதவி வழங்கப்படும். ஏனாமில் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
தெருவோர வியாபாரிகளுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை பயிற்சி அளிக்கப்படும். புதுவையில் ரூ. 60 லட்சம் செலவில் வீடற்றவர் கள் தங்க கட்டிடம் கட்டப்படும் என்று தெரிவித்தார். அப்போது சுயேட்சை எம்எல்ஏ நேரு, "பல தொகுதிகளில் ரேஷன் கடைகளையே காலி செய்துள்ள நிலையில், எப்படி ரேஷன் கடைகள் மூலம் அரிசி தரப்படும்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர், "ரேஷனில் அரிசி தர ஆளுநர், மத்திய அரசு ஒப்புதல் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதுபற்றி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "ரேஷன் கடை விஷயத்தில் குழப்பமாக உள்ளது. இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை ஆகியவை ரேஷனில் தந்தால் தான் சம்பளம் தரமுடியும். நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், மளிகை பொருட்கள் தருவது நடக்காது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT