

வேட்பாளர்களை மாற்றக் கோரி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் சில தொண்டர்கள் வாய்க்கு கறுப்புத்துணி கட்டியும், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக, திமுக ஆகிய முக்கிய 2 கட்சிகளிலுமே உள்ளாட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறுவிதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் அது மிகுதியாகவே நடக்கிறது.
அதிமுகவில் ஒசூர் சாலையில் உள்ள கட்சி மாவட்டத் தலைமை அலுவலகத்திலும், ரத்தினபுரி பகுதியில் உள்ள அதிமுக கிளை அலுவலகம் முன்பாகவும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு கைவிட்டனர் அக்கட்சித் தொண்டர்கள்.
திமுகவிலோ கடந்த 29-ம் தேதி இரவு மாநகராட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அப்போதிருந்தே பிரச்சினைகள் தொடங்கிவிட்டன.
‘கோவை மாநகரில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அத்தனை சீட்டையும் பிரித்துக் கொண்டனர். ஆளாளுக்கு ஒரு ‘ரேட்’ வைத்து புதிதாக கட்சிக்குள் வந்தவர்கள், வசதி படைத்தவர்கள் பாகுபாடின்றி லட்சக்கணக்கான விலை வைத்து விற்கிறார்கள். அதனால் அடிமட்டத் தொண்டன் வழக்கமாக பாதிக்கப்பட்டுள்ளான்’ என்ற கோபதாபங்களால் பலர் நேற்று முன்தினமே வடகோவையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்.
தீக்குளிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் வந்து தடுத்து, கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இச்செய்தி ‘தி இந்து’வில் பிரசுரமானது. இந்த நிலையில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி, வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டங்கள் நேற்றும் நடந்தன.
மாநகராட்சி 53-வது வார்டில் அறிவிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளரை மாற்றக் கோரி இந்த வட்டச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். வாயில் கறுப்புத்துணி கட்டி கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அலுவலக வளாகத்திலேயே அமர்ந்தனர்.
இது குறித்து சதீஷ்குமார் ஆதரவாளர்கள் கூறியதாவது: போன கட்சித் தேர்தலில் பெரும்பான்மை ஓட்டில் வட்டக்கிளையில் ஜெயித்தவர் இவர். கட்சிக்கு கடுமையாக உழைத்துள்ளார். இவருக்குத்தான் ‘சீட்’ என்று கட்சி முக்கிய நிர்வாகி சொல்லி வந்தார். பெண்கள் வார்டு என்பதால் இவர் மனைவி பெயரில் ‘சீட்’ கேட்கப்பட்டிருந்தது. இப்போது கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத, கட்சிப்பணிக்கே வராத ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதை நான் மட்டுமல்ல; என் வார்டில் உள்ள கட்சிக்காரர்கள் பலரும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இதில் உனக்குத்தான் ‘சீட்’ என்று சொல்லி வந்த கட்சி நிர்வாகியே, ‘தலைமையில் சொன்னாங்க. அதுதான் அந்த வேட்பாளரை போட வேண்டியதாயிற்று’ என்று திசை திருப்பி பேசுகிறார் என்றனர்.
இவர்கள் ஒருபக்கம் போராடிக் கொண்டிருக்க 39-வது வார்டைச் சேர்ந்த பி.டி.முருகேசன் என்பவர் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை போலீஸார் தடுத்தனர்.
‘தனது வார்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், தனக்கே தருவதாக சொன்ன வார்டு, உட்கட்சி விவகாரத்தாலேயே காங்கிரஸ் பக்கம் தள்ளிவிடப்பட்டுள்ளது’ என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த தொடர் அமளியில் நேற்று மாலை வரை கோவை திமுக அலுவலகம் ஒருவித பரபரப்பிலேயே ஆழ்ந்திருந்தது.