

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் நேற்று சென்னை அப்போலோ மருத்துவ மனைக்கு வந்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
உடல் நலக்குறைவால் சென்னை அப்போலா மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். இந் நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகி யோர் நேற்று சென்னை வந்தனர். டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்று பகல் 1 மணிக்கு வருகை தந்த இருவரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர், அங்கிருந்து பிற்பகல் 2.18 மணிக்கு முதல்வர் ஜெய லலிதா சிகிச்சை பெறும் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு அமித் ஷா, அருண் ஜேட்லி ஆகியோர் வந்தனர். அவர்களுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்தனர்.
சுமார் 18 நிமிடங்கள் மருத்துவ மனையில் இருந்த அவர்கள், 2.36 மணிக்கு வெளியே வந்தனர். மருத்துவமனை வாயிலில் காத்திருந்த பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இன்று அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று தமிழக முதல்வர் ஜெய லலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்’’ என தெரிவித் துள்ளார்.
அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இன்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா வேகமாக குண மடைய வாழ்த்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா, அருண் ஜேட்லி வருகை குறித்து பாஜக தலைவர் களிடம் விசாரித்தபோது, ‘‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களையும், தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற் றங்களையும் அப்போலோ மருத் துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் மருத்துவக் குழுவினர் அமித்ஷா, அருண் ஜேட்லி இருவருக்கும் விளக்கினர். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்’’ என தெரிவித்தனர். அமித் ஷா, அருண் ஜேட்லி வருகையை முன்னிட்டு அப்போலோ மருத்து வமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.