அமைச்சர் கார் மீது காலணி வீசிய பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பெண் உட்பட 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன், காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட போது அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்தை விட்டு அமைச்சர் புறப்பட்ட போது அவரின் காரை தடுத்து நிறுத்தி பாஜகவினர் காலணியை வீசினர்.

இந்த வழக்கில் பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 9 பேர் ஜாமீனில் வந்துள்ளனர். பாஜக மகளிரணியை சேர்ந்த சரண்யா (காலணி வீசியவர்), பாஜக நகர் மாவட் துணைத் தலைவர் வினோத்குமார் ஆகியோர் மட்டும் சிறையில் இருந்தனர். இந்த நிலையில் இவர்களது ஜாமீன் மனு மதுரை 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின்னர் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை சரண்யா சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், வினோத்குமார் அவனியாபுரம் காவல் நிலையத்திலும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் கைதான பாஜகவினர் அனைவரும் ஜாமீனில் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் தேடும் 4 பேர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in