Last Updated : 30 Aug, 2022 05:09 PM

 

Published : 30 Aug 2022 05:09 PM
Last Updated : 30 Aug 2022 05:09 PM

“உணவில் புழுக்கள்” - கோவை பாரதியார் பல்கலை. விடுதி மாணவிகள் போராட்டம்

உணவின் தரம், தண்ணீர் பிரச்சினை சரிசெய்து தரக்கோரி கோவை பாரதியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு தட்டுகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபபட்ட மாணவிகள்.

கோவை: உணவின் தரம், தண்ணீர் பிரச்சினையை சரிசெய்து தரக் கோரி கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் 70-க்கும் மேற்பட்டோர் இன்று (ஆக.30) பல்கலைக்கழக நுழைவுவாயிலில் தட்டுகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மாணவிகள் சிலர் கூறும்போது, "நடப்பாண்டுக்கான வகுப்புகள் தொடங்கியது முதல் கண்ணம்மா, பெரியார் மகளிர் தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம் சரியில்லை. குடிக்கவும், இதர தேவைக்களுக்காக பயன்படுத்தவும் தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. காய்கறிகள், பருப்பு போன்றவற்றை கழுவாமல், அப்படியே பயன்படுத்துவதால் உணவில் புழுக்கள் உள்ளன.

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல, நேற்று காலை விளையாட்டு வீரர்கள் காலை 6 மணிக்கு மைதானத்துக்கு செல்ல தயாராகினர். ஆனால், தண்ணீர் இல்லாததால் அவர்கள் செல்ல இயலவில்லை. எனவே, உணவு தரம் சரியில்லாதது, தண்ணீர் பிரச்சினையை சரிசெய்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றனர்.

உடனே, தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு, பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துபூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த மாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x