

வேலூரில் கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட ஜார்கண்ட் மாநில சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் மீட்பு குழுவினர் திணறி வருகின்றனர். 2 கி.மீ தொலைவுள்ள கால்வாய் முழுவதும் 3-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.
ஜார்கண்ட் மாநிலம் கிரீதி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜித் முகர்ஜி, தனது 8 வயது மகள் நேகாவின் மருத்துவ சிகிச்சைக்காக வேலூரில் தங்கியுள்ளார். கடந்த திங்கள்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு, அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் வந்தபோது மூத்த மகள் பிரியங்கா (14), அங்குள்ள கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்தார். பலத்த மழை காரணமாக மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சியில் உறைந்த இந்திரஜித் மற்றும் பொதுமக்கள் சிறுமியை மீட்க முயன்றனர்.
பேலஸ் கபே சந்திப்பில் இருந்து தொடங்கி, தோட்டப்பாளையம் வழியாக சத்துவாச்சாரி தென்றல் நகரில் முடியும் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, தேங்கிய சகதியை அகற்றியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல் துறை, தீயணைப்பு துறையினர் அடங்கிய புது குழுவினர் கால்வாய் முழுவதும் தேடும் பணியை செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கினர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
தேசிய பேரிடர் மீட்பு குழு
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு வேலூர் வந்தனர். புதன்கிழமை காலை பேரிடர் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. வடமேற்கு மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இருந்து 40 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் துணை இயக்குநர் (தீயணைப்பு) மீனாட்சி தலைமையில் வேலூருக்கு வந்துள்ளனர். இவர்களுடன் ஆயுதப்படை காவலர்கள் சுமார் 40 பேர், ரிவர்வியூ சந்திப்பில் தொடங்கி தென்றல் நகர் பகுதிவரை கால்வாயில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மாநகராட்சி சார்பில் கால்வாயில் இருந்த குப்பைகள் முழுவதையும் அகற்றி, சடலம் எங்காவது தென்படுகிறதா என தேடியும் கிடைக்கவில்லை. திங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கிய தேடுதல் வேட்டை புதன்கிழமை இரவு 8 மணியை கடந்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை. 3-வது நாளாக தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது.
இடைவிடாது நடந்துவரும் தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் சோர்வடைந்துள்ளனர். இதற்கிடையில், மீட்பு பணிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை பார்வையிட்டார். மீட்பு பணி தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சிறுமியின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் வீரமணி ஆறுதல் கூறினார்.
மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக புதன்கிழமை இரவு ரிவர் கோம்பிங் ஆபரேஷனில் ஈடுபட போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, தோட்டப்பாளையத்தில் தொடங்கி தென்றல் நகர் வரை தொடர்ந்து கால்வாயில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட முடிவு செய்தனர்.