தலைமை ஆசிரியரின் பணியிட மாறுதலைக் கைவிடக் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஓமலூர் அருகே வாலதாசம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியரின் பணியிட மாற்றத்தைக் கைவிட வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.
ஓமலூர் அருகே வாலதாசம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியரின் பணியிட மாற்றத்தைக் கைவிட வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.
Updated on
1 min read

ஓமலூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியையின்பணியிட மாறுதலை கைவிடக்கோரி, அப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்பை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சிவகுமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் பணியாற்றிய ரவீந்திரநாத் என்ற ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேஷ் கண்ணன், வன்னியனூர் பள்ளி தலைமை ஆசிரியர் சிவ குமாரை, ஓமலூரை அடுத்துள்ள வாலதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தார். அதேபோல், வாலதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசித்ரா, வன்னியனூர் பள்ளிக்கு கடந்த 26-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வாலதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசித்ராவின் பணியிட மாற்றத்தைக் கைவிட வலியுறுத்தி, அப்பள்ளியின் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்பை புறக்கணித்தனர். மேலும், பள்ளி வளாகம் எதிரே திரண்ட அவர்கள், தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர்.

மாணவர்களின் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தின்போது, உடனிருந்தனர்.மாணவர்களின் கோரிக்கை குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:

தலைமை ஆசிரியை ஜெயசித்ரா, பல ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர், பள்ளிக்குத் தேவையான பல அடிப்படை வசதிகள், புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை அரசு நிதியை எதிர்பாராமல், மக்கள் பங்களிப்புடன் செய்துள்ளார். தனியார் பள்ளிகளைப் போல, இங்கும் பள்ளி ஆண்டுவிழா, சுதந்திர தினவிழா உள்ளிட்டவற்றை கலை நிகழ்ச்சிகளோடு நடத்தி வருகிறார்.

குறிப்பாக, மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள், மாறுவேடம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு ஏற்படுத்தி, அவர்கள் உற்சாகத்துடன் கல்வி பயில வைக்கிறார்.

இதனால், தனியார் பள்ளிகளில் பயில வைத்த தங்கள் குழந்தைகளை, பலர் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர். மாணவ, மாணவிகளுக்குப் பிடித்த தலைமை ஆசிரியரை, வேறுஇடத்திற்கு மாறுதல் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியில் நீடிக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in