

சென்னை: வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி 1முதல் ஜூலை 31 வரை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 21மாவட்டங்களில் 12,300 விவசாயிகளிடம் 14,800 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ், 6 மாதங்களுக்கு மட்டுமேகொள்முதல் செய்யப்பட்டதால், ஜூலை 31-க்குப் பின் வெளிச்சந்தையில் கொப்பரைத் தேங்காயின் விலை கணிசமாகக் குறைந்தது.
தமிழக தென்னை விவசாயிகளுக்கு லாபகரமான விலைகிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, கொப்பரைகொள்முதலுக்கான கால அளவைமேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்தது.
இதையேற்று, கடந்த ஆக.26-ம் தேதி மத்திய அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதலை வரும் செப்.30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. உடனடியாக 21 மாவட்டங்களிலும் உள்ள 46ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரையை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய, மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக்கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து, அரசு நிர்ணயித்துள்ள தரத்துக்கேற்ப, நன்கு உலரவைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம் பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வரவேண்டும்.
பந்து கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.110-க்கும், அரவை கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.105.90-க்கும் கொள்முதல் செய்யப்படும். தென்னை விவசாயிகள் அனைவரும் இந்த கொள்முதல் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.