

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக, சுகாதாரத்துறைச் செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், துணை இயக்குநர் (ஆய்வகம்) ராஜு ஆகியோர் நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ளஆய்வகங்கள், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி உயிர் வேதியியல் துறையின் வெளிப்புற தர உத்தரவாத சேவைகள் மூலம் ஆய்வக ஆய்வுகளின் தரத்தை உறுதி செய்வதற்கான திட்டத்தில் பங்கேற்கின்றன. ஆய்வக முடிவுகளின் தரம் மூன்றாம் தரவு திறன் சோதனை வழங்குநரால் மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவிலேயே ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ஆய்வகங்களுக்கும் தரக்கட்டுப்பாடு திட்டத்தை தமிழகம் மட்டுமே செயல்படுத்தியுள்ளது.
ஆய்வகங்களுக்கான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் என்பது இந்திய தர கவுன்சிலின் ஓர் அங்கமாகும். இது சர்வதேச தரத்திலான மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களுக்கு ஆய்வக அங்கீகாரம் வழங்குகிறது.
தமிழகத்தில் பொது சுகாதாரம்மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பத்தூர் மாவட்டம், பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம், ராமநாதபுரம் மாவட்டம், வெங்கிட்டாங்குறிச்சி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கூடுதல் ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை தேசிய தர நிர்ணயஅங்கீகார வாரியத்தின் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து, நாட்டிலேயே முதன் முறையாக தர உறுதி சான்றிதழைப் பெற்றுள்ளன.
கடந்த 25-ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் 5 ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் இந்த தரச் சான்றிதழ்களை வழங்கியது.
அனைத்து ஆய்வகங்களும் படிப்படியாக இந்த அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.