Last Updated : 06 Oct, 2016 09:22 AM

 

Published : 06 Oct 2016 09:22 AM
Last Updated : 06 Oct 2016 09:22 AM

சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே காய்ந்து கிடக்கும் புல்வெளி: பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே புல்வெளிகள் காய்ந்து கிடப்பதால், அவற்றில் நீர்ப்பாய்ச்சி புத்துயிரூட்ட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்துக்கு எதிராக காந்தி சிலை உள்ளது. இந்த சிலையைச் சுற்றி மரங்களும், பூங்காக்களும் உள்ளன. பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் காந்தி சிலை அருகே தரையில் அமரும் வண்ணம் டைல்ஸ் கற்களால் தளம் போடப்பட்டுள்ளது. மேலும், சிலையை சுற்றிலும் புல்வெளிகளும் சில வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டன.

காய்ந்த புல்வெளி

தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் 65-வது பிறந்த நாளின்போது, 65 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மேற்கொண்ட அரசு, அதனை காந்தி சிலை அருகில் இருந்துதான் தொடங்கியது. அங்கே மரங்கள் நடப்பட்டபோது, புல்வெளிகளும் விஸ்தரிக்கப் பட்டன. இந்நிலையில், சரியானபடி தண்ணீர் பாய்ச்சாததாலும், உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததாலும், காந்தி சிலையை சுற்றியுள்ள புல்வெளிகள் காய்ந்து கிடக்கின்றன.

அசுத்தம்

இது தொடர்பாக திருவல்லிக் கேணி பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கூறும்போது, “மெரினாவில் காந்தி சிலை அருகில் உள்ள புல்வெளிகள் பராமரிப்பின்றி காய்ந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக் கப்புகள் அதிகளவில் குவிந்துள்ளன. சிலர் சிறுநீர் கழிக்கவும் செய்கின்றனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வருபவர்கள் அந்த இடத்தை அசுத்தப்படுத்துகின்றனர். இதனால், சுற்றுலா வருவோரும், பொதுமக்களும் காந்தி சிலை அருகே செல்ல முடியவில்லை. எனவே, பசுமையை பேணும் வண்ணம் அந்த புல்வெளிக்கு முறையாக தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட இடத்தை உடனே பார்வையிட்டு, புல்தரையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப் படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x