Published : 18 Oct 2016 08:03 PM
Last Updated : 18 Oct 2016 08:03 PM

காவிரி விவகாரத்தில் பாஜக அரசு அநீதிக்கு துணை போகிறது: கருணாநிதி குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அரசியலுக்காக பாஜக அரசு அநீதிக்கு துணை போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவ அறிக்கையில், ''சென்னை மாநகரில் தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலியாகியுள்ளனர். மிகப்பெரிய கொடுமை இது. அவர்களின் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே, வாகனங்களை ஓட்டுபவர்கள் மனிதாபிமானத்தோடும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தங்கள் குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் சார்பில் இந்தக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜகவுக்காக நீண்ட காலம் உழைத்து வருபவர். என்னிடம் தனிப்பட்ட முறையில் என்றும் மாறாத அன்பு கொண்டவர். அவருக்கு கிடைத்துள்ள இந்தப் பொறுப்பு மகிழ்ந்து பாராட்டப்படக் கூடியது. அவரை மனதார வாழ்த்துகிறேன்.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியத்தை கைகழுவிய மத்திய அரசு, மேகதாது அணை பிரச்சினையில் நியாயமாக நடந்து கொள்ளும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது என மத்திய அரசு கூறியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அவ்வாறு செய்ய முடியாது என்கிறது மத்திய அரசு. உச்ச நீதிமன்ற தீர்ப்பைக்கூட தலைவணங்கி ஏற்கும் அல்லது தலை வணங்கி எதிர்க்கும் என்பதற்கு இந்த இரு பிரச்சினைகளே எடுத்துக்காட்டாகும்.

கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தை சொல்ல முடியாது என தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் தேவா கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் யாரும் கலைமாமணி இல்லை என்பதும் ஒரு சாதனை என கூறிக் கொள்ளலாம்.

நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம், கிருஷ்ணா, கோதாவரி மேலாண்மை வாரியம் அமைத்தது போல காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைத்திருக்கலாம். இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்தும் அரசியலுக்காக பாஜக அரசு அநீதிக்கு துணை போகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் கொண்டு வர முயற்சி நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நுழைவுத் தேர்வுக்கு அனுமதி அளித்துள்ளது. இது 2017-ல் தமிழகத்துக்கும் பொருந்தும்.

சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. வழக்கம்போல இந்த விஷயத்திலும் அதிமுக அரசு தூங்கிவிடுமானால் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது பகல் கனவாகி விடும்.

பொது விநியோகத் திட்டத்தின்படி வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான அரிசியின் விலையை மத்திய அரசு கிலோ ரூ. 8.30-லிருந்து ரூ. 22.54 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய பாஜக அரசு சத்தமில்லாமல் செய்திருக்கும் கொடுமை இது. இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

கனடா நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மாதமாக அறிவித்துள்ளனர். ஜனவரி மாதத்தில்தான் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடப்படுகிறது. எனவே, ஜனவரியை தமிழ் மாதமாக தேர்வு செய்துள்ளது பொருத்தமானது.

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு பராமரிக்கவில்லை. அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நூலகத்தை பராமரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நூலகத்தை சீரமைக்க காலக்கெடுவும் விதித்தது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.

கடந்த 6 ஆண்டுகளில் வெறும் 1,234 புத்தகங்கள் மட்டுமே இந்த நூலகத்துக்கு வாங்கப்பட்டுள்ளன. உறுப்பினர் சேர்க்கையும் நிறுத்தப்பட்டுள்ளன. நூலகத்தை முறையாக பராமரித்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அண்ணா நூலகம் இன்னமும் சரிவர பராமரிக்கப்படவில்லை. போட்டித் தேர்வுப் பிரிவில் உள்ள புத்தகங்கள் மாயமாகும் அளவுக்கு குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரிலும், அண்ணாவின் உருவத்தை கொடியிலும் வைத்துள்ள கட்சியின் ஆட்சியில் அண்ணா பெயரிலான நூலகத்தை புறக்கணிப்பதுதான் மிகப்பெரிய முரண்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x