

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் 209 இடங்களில் 7,502 கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், தேரேகால்புதூர் ஊராட்சி பகுதிகளில் ‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து தூய்மைப் பணியை மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:
குமரி மாவட்டத்தில் தோவாளை, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, மேல்புறம், முஞ்சிறை, தக்கலை, திருவட்டாறு, கிள்ளியூர் ஆகியஊராட்சி ஒன்றிய பகுதிகளில்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து கிராம ஊராட்சிகளில் இதுவரை குப்பைகள் கொட்டப்பட்ட 209 இடங்களில் இருந்து 7,502 கிலோ கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இத்தூய்மை விழிப்புணர்வு செயல்பாடுகளில் 5,174 பேர் பங்கேற்றனர்.
178 பொது இடங்கள், 23 கழிவு நீரோடைகள், 9 சுகாதார வளாகங்கள், 9 கல்லூரிகள், 142 பள்ளிகள், 441 அங்கன்வாடி மையப் பகுதிகள், 191 அரசு கட்டிடங்கள், 74 நீர் நிலைகள், 9 பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2 வரை இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.