

மாணவர்கள் எந்த சூழலிலும் படிப்பை விட்டுவிடக் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
திருச்சி சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளிச் செயலாளர் கே.மீனா, தலைவர் தோட்டா பி.வி.ராமானுஜம் ஆகியோர் தலைமைவகித்தனர். பள்ளியின் தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், இயக்குநர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மேஜர் தியான் சந்த் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசியது: மாணவர்கள் படிக்க வேண்டும். விளையாட வேண்டும். ஆனால், லட்சியத்தை விட்டு விடக்கூடாது. எந்தசூழலிலும் படிப்பையும் விட்டுவிடக்கூடாது. உலகளவில் இந்தியா கல்வித் தரத்தில் சிறந்து விளங்குகிறது. கல்வி என்பது நமது இறுதி வரை வரக்கூடியது. எனவே, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து படிக்க வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை மாணவர்கள் மதிக்க வேண்டும். உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கப் பழக வேண்டும். எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.
ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்த வேண்டும். இந்த பள்ளி ஒரு சிறந்த கல்வி நிறுவனம். இங்கு பயிலும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார்.
பள்ளியின் மாணவ நிர்வாகிகள், விளையாட்டு அணித் தலைவர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து, சிறந்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றசந்தானம் வித்யாலயா, அகிலாண்டேஸ்வரி, மகாத்மா காந்தி, ராஜாஜி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை கபில்தேவ் வழங்கினார்.
விழாவில், பள்ளியின் கல்வி ஆலோசகர் நந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முதல்வர் பத்மா சீனிவாசன் வரவேற்றார். டீன் ஆர்.கணேஷ் நன்றி கூறினார்.