

அம்மா உணவகம், அம்மா குடிநீர் ஆகியவற்றைத் தொடர்ந்து மலிவு விலை அம்மா உப்பு விற்பனையை தமிழக அரசு தொடங்குகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் மலிவு விலை உப்பு விற்பனையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மேலும், மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் பசுமைப் பண்ணை காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.
அதேபோல், கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்காக சென்னையில் முதல்கட்டமாக 200 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இவற்றில், காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5-க்கு பொங்கல் வழங்கப்படுகிறது. பகலில் ரூ.5-க்கு சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதமும், ரூ. 3-க்கு தயிர் சாதம், இரவில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் கிடைக்கிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் மற்ற மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையங்கள் மற்றும் தொலைதூர பஸ்களில் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யும் திட்டத்தையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மலிவு விலை உப்பு விற்பனையையும் தமிழக அரசு தொடங்குகிறது. இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உப்பு வகைகளுக்கு அம்மா உப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் வகை உப்பு ரூ.14-க்கும், இரண்டாம் வகை உப்பு ரூ.10-க்கும், 3-வது வகை உப்பு ரூ.21-க்கும் விற்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
மலிவு விலை அம்மா உப்பு விற்பனையை முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த உப்பு வகைகளை தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது.