

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி ராகுல்காந்தியின் நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா' (பாரதமே ஒன்றி ணைவோம்) என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
செப். 7-ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கும் அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.
ஸ்ரீ பெரும்புதூரில் மரியாதை
குமரி மாவட்டத்தில் மட்டும் 10-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். 11-ம் தேதி காலை கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். தினமும் 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப். 7-ம் தேதி காலை சென்னை வரும் ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வரும் அவர், காந்தி மண்டபம் அருகே மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். பின்னர், மகாத்மா காந்தி நினை விடத்தில் தலைவர்கள் அனைவரும் மரியாதை செலுத்துகின்றனர்.
அங்கிருந்து ராகுல்காந்தியின் நடைபயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.