Published : 30 Aug 2022 05:15 AM
Last Updated : 30 Aug 2022 05:15 AM

விலங்குகள் மீதான பாசத்தால் வேளாண் ஆராய்ச்சியாளர் பணியை துறந்த ஷிராணி பெரேரா - 900 விலங்குகளை பராமரித்து வருகிறார்

இரா.நாகராஜன்

சென்னை: விலங்குகள் மீது கொண்ட அளவற்ற பாசம் காரணமாக, வேளாண் ஆராய்ச்சியாளர் பணியை துறந்து, திருவள்ளூர் அருகே 900-க்கும் மேற்பட்ட விலங்குகளை ஷிராணி பெரேரா என்ற பெண் பராமரித்து வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கடந்த 25-ம் தேதி ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி 65 எருமை மாடுகளைக் கொண்டு சென்ற லாரியை போலீஸார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த லாரியில் போதிய இடவசதி இன்றி, நிற்க வைத்து, அவற்றை துன்புறுத்தும் வகையில் ஆந்திராவிலிருந்து, கேரளாவுக்குஎருமை மாடுகளை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீஸார், 65 எருமை மாடுகளை மீட்டு, திருவள்ளூர் அருகே உள்ள ‘விலங்குகளுக்கான மக்கள் (People for Animal) என்ற கோசாலையில் விட்டனர். வழக்கமாக கோசாலைகளில் எருமை மாடுகளைப் பராமரிப்பது இல்லை. ஆனால் இந்த அமைப்பு எல்லா விதமான விலங்குகளையும் பராமரித்து வருகிறது. இந்த கோசாலையைப் பராமரித்து வரும் பெண்மணியான ஷிராணி பெரேரா, விலங்குகள் மீதான அளவற்ற பாசத்தால் தனது வேளாண் விஞ்ஞானி பணியைத் துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ‘விலங்குகளுக்கான மக்கள்’ அமைப்பின் இணை நிறுவனர் ஷிராணி பெரேரா, ‘இந்து தமிழ் திசை' செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் முதுநிலை விலங்கியல் பட்டதாரி. நீர் சார்ந்த உயிரியலில் பிஎச்.டி முடித்துள்ளேன். 1993-ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) வேளாண் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தேன். அங்கு ஊட்டச்சத்து, நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் போன்ற பிரிவுகளில் பணியாற்றினேன். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். மகாத்மா காந்தியின் அகிம்சையை தீவிரமாக ஆதரிப்பவள் நான். இளம்வயது முதலே விலங்குகள் பராமரிப்பில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் குரலற்ற விலங்குகளின் குரலாகவும், பாதுகாப்பற்ற விலங்குகளின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன் காரணமாக 1994-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் நண்பர்களுடன் இணைந்து ‘விலங்குகளுக்கான மக்கள்' அமைப்பைத் தொடங்கினேன்.

வேளாண் ஆராய்ச்சியாளர் பணி, விலங்குகள் நல ஆர்வலர் பணி ஆகியவற்றை ஒரே நேரத்தில் மேற்கொள்வது சிரமமாக இருந்தது. அதனால் 2012-ம் ஆண்டு, வேளாண் ஆராய்ச்சியாளர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். தற்போது இந்த கோசாலையில் 170 பசுக்கள், 450 நாய்கள், 140 பூனைகள், 30 குதிரைகள் மற்றும் கழுதைகள், பன்றிகள், ஆடுகள், பறவைகள் என மொத்தம் 900-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை குதிரைகளை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு என்ன செய்வது என்ற கொள்கைகள் வகுக்கப்படவில்லை. இந்நிலையில், முதிர்வை எட்டும் குதிரைகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். பரிசோதனைகளுக்காக விலங்குகளைக் கொல்லக் கூடாது என எங்கள் அமைப்பு சார்பில் குரல் கொடுத்தோம். இதனால், கல்லூரிகளில் விலங்குகளை வைத்து பரிசோதனைகள் செய்ய யூஜிசி தடை விதித்துள்ளது. சென்னையில் 1994-ம் ஆண்டு வரை 70 ஆண்டுகளாக மின்சாரம் பாய்ச்சி நாய்களைக் கொல்லும் நடைமுறை இருந்தது. எங்கள் அமைப்பின் முயற்சியால் அந்த நடைமுறைக்கு 1994-ம்
ஆண்டே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x