Published : 30 Aug 2022 04:01 AM
Last Updated : 30 Aug 2022 04:01 AM

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 18 கோயில்களில் ரூ.105 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 18 கோயில்களில் அறநிலையத் துறை சார்பில் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்படும் 25 புதிய திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு, 250-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என கோயில்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்
களை இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற 18 கோயில்களில் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ரூ.35 கோடியில் தங்கும் விடுதி, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.12.90 கோடியில் முடி காணிக்கை, விருந்து மண்டபம், வேங்கடசமுத்திரம் காட்டு பத்ரகாளி அம்மன் கோயிலில் ரூ.3.70 கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளன.

சென்னையில் வடபழனி ஆண்டவர் கோயிலில் ரூ.9.84 கோடியில் அன்னதானக் கூடம், முடி காணிக்கை மண்டபம், பல்நோக்கு கட்டிடம், ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ரூ.2.54 கோடியில் வணிக வளாகம், குடியிருப்பு கட்டிடம், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ரூ.3.65 கோடியில் அர்ச்சகர், பணியாளர் குடியிருப்பு, கோடம்பாக்கம் பரத் வாஜேஸ்வரர் கோயில் சார்பில் அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் ரூ.1.72 கோடியில் உணவருந்தும் கூடம், கலையரங்கம் கட்டப்பட உள்ளன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடியில் பணியாளர் குடியிருப்பு, தங்கும் விடுதி, ரூ.3.22 கோடியில் துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.2.46 கோடியில்அய்யாப் பிள்ளை தெரு, முத்துகாளத்தி தெருவில் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ரூ.1.90 கோடியில் அர்ச்சகர், பணியாளர் குடியிருப்பு, குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.2.95 கோடியிலும், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை நித்யகல்
யாணப் பெருமாள் கோயிலில் ரூ.4.30 கோடியிலும், திருவண்ணாமலை புதூர் செங்கம் மாரியம்மன் கோயிலில் ரூ.2.78 கோடியிலும் திருமண மண்டபங்கள் கட்டப்படுகின்றன.

சேலம் அம்பலவாண சுவாமி கோயிலில் ரூ.3.65 கோடியில் ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் அலுவலகம், விருதுநகர், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.3.22 கோடியில் அர்ச்சகர், பணியாளர் குடியிருப்புகள், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் ரூ.3.95 கோடியிலும் மாவூத்து உதயகிரிநாத சுவாமி கோயிலில் ரூ.1.35 கோடியிலும் திருக்குள திருப்பணிகள் நடக்க உள்ளன. தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.1.87 கோடியில் கூடுதல் வகுப்பறைகள், நடைபாதை தளம், திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோயிலில் ரூ.1.52 கோடியில் ஓதுவார் பயிற்சி பள்ளி கட்டிடம் என மொத்தம் ரூ.105 கோடியில் திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, துறை செயலர் சந்திரமோகன், துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்து அறநிலையத் துறை சார்பில், ரூ.105 கோடி மதிப்பீட்டில் 18 திருக் கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x