தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் அலைமோதிய மக்கள்

தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் அலைமோதிய மக்கள்
Updated on
2 min read

தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் கடைவீதிகள் நேற்று முன் தினம் களைகட்டியிருந்தன.

பெற்றோர், குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஒருங்கிணைக்கும் விழாவாக தீபாவளி திருநாள் திகழ்கிறது. தீபாவளி இன்று கொண்டாடப்படும் நிலையில், கடைவீதிகள் களைகட்டியிருந்தன. திருநெல்வேலி

திருநெல்வேலியில் டவுன் ரதவீதிகள், நெல்லையப்பர் நெடுஞ்சாலை, சந்திப்பு மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம் பகுதி, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் நேற்று கூட்டம் அதிகமிருந்தது. ஜவுளிக் கடைகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையகங்கள், பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதியது.

பேருந்துகளில் கூட்டம்:

தீபாவளி கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றதால், திருநெல்வேலி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலும், சந்திப்பு ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமிருந்தது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் கடைவீதிகள், பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பூக்கள் விலை உயர்வு :

தீபாவளியையொட்டி திருநெல்வேலி டவுன் மற்றும் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பூக்களின் விலையும் வழக்கத்தைவிட உயர்ந்திருந்தது. குறிப்பாக மல்லி, பிச்சி பூக்களின் விலை ரூ.200 முதல் 300 வரையில் உயர்ந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பூக்களின் விலை (கிலோவுக்கு)- மல்லி- ரூ.700, பிச்சி- ரூ.700, செவ்வந்தி- ரூ.200, கனகாம்பரம்- ரூ.500, கேந்தி- ரூ.80 -க்கு விற்பனையானது.

காய்கறி நிலவரம்:

டவுன் சந்தையில் காய்கறிகள் விலையில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்கவில்லை. மேலும், விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை என்று, காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். காய்கறிகள் விலை (கிலோவுக்கு): கத்தரிக்காய்- ரூ.10, அவரை- ரூ.20, கேரட்- ரூ.40, தக்காளி- ரூ.20, வெண்டைக்காய் ரூ.10.

இதுபோல், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், புளியங்குடி, வள்ளியூர், ஆலங்குளம், களக்காடு, நாங்குநேரி, சுரண்டை உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் தீபாவளி வியாபாரம் களைகட்டியது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் டபிள்யூ ஜிசி சாலை, நகைக்கடை பஜார், பாளையங்கோட்டை சாலை போன்ற பிரதான சாலைகளில் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், பூமார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், தூத்துக்குடியில் உள்ள அனைத்து பிரதான சாலைகளிலும் நேற்று மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். நடமாடும் கண்காணிப்பு கேமரா வாகனம் மூலம் போலீஸார் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர்.

சாலையோரங்களில் ஏராளமான தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. அவற்றிலும் வியாபாரம் நேற்று ஜரூராக இருந்தது. இதேபோல் கோவில்பட்டி, சாத்தான்குளம், ஏரல், உடன்குடி, திருச்செந்தூர் போன்ற அனைத்து நகரங்களிலும் கடைவீதிகள் நேற்று மாலை களைகட்டியிருந்தது.

ஆட்டுச் சந்தை:

வழக்கமாக சனிக்கிழமைகளில் நடைபெறும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை தீபாவளியை முன்னிட்டு நேற்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக் காக இங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. 10 கிலோ வரை எடையுள்ள ஆடுகள் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் என, அனைத்து நகரங்களிலும் ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், ஸ்வீட் ஸ்டால்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகமான மக்கள் குவிந்ததால் நாகர்கோவில் நகரில் நேற்று காலை முதல் இரவு வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பட்டாசு கடைகளில் குழந்தைகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

நாகர்கோவிலில் குடிசைத் தொழிலாக கைச்சுற்று முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து தயாரிக்கும் வீடுகளில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in