Published : 29 Aug 2022 02:29 PM
Last Updated : 29 Aug 2022 02:29 PM

தருமபுரி | பாரத மாதாவுக்கு ஆலயம் அமைப்பதுதான் சுப்பிரமணிய சிவா விருப்பம்; நினைவாலயம் அல்ல: பாஜக விளக்கம்

பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம், தருமபுரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

தருமபுரி: தேசியத்தை பாதுகாக்கவும், நாட்டின் ஒற்றுமைக்காகவும் பாஜக எவ்வித போரட்டங்களையும் முன்னெடுக்கும் என அக்கட்சி மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தருமபுரியில் தெரிவித்தார்.

பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் இன்று (ஆக.29) தருமபுரி வருகை தந்தார். அவர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ''இந்தியாவின் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்துவது, தியாகிகளை சந்தித்து கவுரவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டது.

அந்த வரிசையில், கடந்த 11-ம் தேதி காவல்துறையின் அனுமதிபெற்று, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா ஆலயத்தில் மரியாதை செலுத்தச் சென்றோம். அப்போது ஆலயத்தை திறக்க மறுத்தனர். எனவே, அவர்களை மீறி உள்ளே சென்று மரியாதை செய்தோம்.

இந்திய தேசம் உள்ளவரை பாரத மாதா என்பவர் என்றென்றும் இந்த மண்ணில் வாழக் கூடிய சாகாவரம் பெற்றவர். இந்த தேசத்தில் வாழும் அனைவருக்கும் அவர் கடவுள் தான். அவருக்கு அமைக்கப்பட்ட ஆலயத்திற்கு 'நினைவாலயம்' என்று பெயர் வைத்துள்ளனர். இதை மாற்றக் கோரி பலமுறை கோரிக்கை எழுப்பியும் பலனில்லை. இதை கண்டித்தும், பெயரை மாற்றக் கோரியும் பாஜக சார்பில் முதற்கட்டமாக கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அதற்கும் பயனில்லை எனில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

தன்னையே இந்த தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர் சுப்பிரமணிய சிவா, பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் அமைக்க விரும்பி வழிபட்டு வந்தார். அவர் விரும்பியபடி அதை ஆலயம் என பெயர் மாற்றுக. மேலும், அன்றாடம் அனைவரும் வந்து வழிபடவும், மரியாதை செய்யவும் உகந்த இடமாக அதை மாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை.

பாஜக மேற்கொண்டு வரும் நற்காரியங்களை தடுப்பதற்காக, தமிழக அரசு காவல்துறையை ஏவி விடுகிறது. இந்த அரசுக்கு எச்சரிக்கையாக ஒன்றை கூறிக்கொள்கிறேன். தேசியத்தை பாதுகாக்கவும், நாட்டின் ஒற்றுமைக்காக, பிரிவினை வாதத்தை தடுக்க பாஜக எவ்வித போராட்டத்திலும் ஈடுபடும்.

பாரத மாதா நினைவாலயம் என்று அரசு ஆணையை வெளியிட்ட அதிமுக-வும், அதே பெயரில் திறந்து வைத்த திமுக-வும் தவறு செய்துள்ளது. இதை தற்போதுள்ள அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்.'' இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர், மக்களவை முன்னாள் உறுப்பினர் நரசிம்மன், முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x