வங்கிக் கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளர் ஜாமீன் கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

வங்கிக் கொள்ளையில் மீட்கப்பட்ட நகைகள் | கோப்புப் படம்
வங்கிக் கொள்ளையில் மீட்கப்பட்ட நகைகள் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் அமல்ராஜ் ஜாமீன் கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது அமர்வு கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான நகைகடன் பிரிவில், கடந்த ஆக.13-ம் தேதி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அரும்பாக்கம் போலீஸார், அதே வங்கியில் பணியாற்றிய முருகன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான சந்தோஷ் என்பவரின் உறவினரான அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் 3.50 கிலோ நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மறைக்க உதவிய குற்றத்திற்காக காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமல்ராஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கில் காவல் துறை தன்னை தவறாக சேர்த்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கக் கூடிய நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இன்று விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது அமர்வு கூடுதல் நீதிபதி ஸ்ரீதேவி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் அரும்பாக்கம் போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in