Published : 21 Jun 2014 09:04 AM
Last Updated : 21 Jun 2014 09:04 AM

இந்து இயக்க தலைவர்கள் கொலை: 4 மாதத்துக்கு முன்பே வந்த மிரட்டல் கடிதம்

இந்து இயக்க தலைவர்கள் கொலை தொடர்பாக சென்னை இந்து முன்னணி அலுவலகத்துக்கு 4 மாதத்துக்கு முன்பே மிரட்டல் கடிதம் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்து இயக்க தலைவர்கள் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்நிலை யில் பிப்ரவரி மாதம் 22-ம் தேதி சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், “சென்னை, தாம்பரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 9 இந்து முன்னணி தலைவர்கள் கொல்லப்படுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு மே 16-ம் தேதி மேலும் ஒரு கடிதம் வந்தது. அதில், ‘எனது பெயர் பாட்ஷா. சில தீவிரவாத அமைப்பினரால் பயிற்சி அளிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டவன் நான். இந்து முன்னணி பிரமுகர்கள் கொலையில் கைதாகியுள்ள 3 பேரையும் விடுவிக்காவிட்டால் இந்து இயக்கத்தை சேர்ந்த 9 தலைவர்கள் விரைவில் கடத்தி கொலை செய்யப்படுவார்கள்.

இதற்காக சென்னையில் 27 பேர் ஊடுருவி உள்ளனர். மார்ச் 19-ம் தேதிக்குள் இதனை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கடத்த 5 பேர் அவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

கொலை செய்யும் இயக்கத்தில் இருந்து நான் வெளிவந்து திருந்தி வாழ்ந்து வருகிறேன். இந்த கடிதத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதங்களை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் புகார் கொடுத்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவல கத்திலும் புகார் கொடுத்தனர். கடிதத்தில் கூறியிருந்தது போலவே திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் புதன்கிழமை இரவு வெட்டிகொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட சிடிஎச் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அவர் கொலை செய்யப்பட்ட அலுவலகத்தைச் சுற்றியிருக்கும் தனியார் நிறுவனங்களின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் பார்த்தனர். இதில் 7 கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது.

கொலை நடந்த நாளில் 2 மோட்டார் சைக்கிள் களில் 3 பேர் செல்வதும், அவர்களின் மோட்டார் சைக்கிள்களில் அரிவாள், கத்தி இருப்பதும் கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் கொலை நடந்த பிறகு அவர்கள் திரும்பி செல்லும் காட்சிகள் இல்லை. எனவே அவர்கள் வேறு வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொலை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பதிவாகியுள்ள காட்சிகளையும் காவல் துறையினர் பார்த்தனர். இதில் 2 முறை அதே நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து செல்வது பதிவாகியுள்ளன எனவே, கொலைகாரர்கள் தெளிவாக திட்டமிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x