

தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் புதுச்சேரியில் மேற் கொண்ட அதிரடி சோதனையில் ரூ.50 கோடி மதிப்பிலான 11 சிலை கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக தச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சிலைகள் திருடி வெளிநாட்டில் விற்றதாக கைது செய்யப்பட்டவர் சிலை கடத்தல் மன்னன் தீன தயாள். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு சிலை கடத்தலுக்கு பலர் உதவியது தெரியவந்தது.
மேலும் பல கோடி ரூபாய் மதிப் பிலான கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட் டன. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் போலீஸார் பல்வேறு இடங்களில் சென்று சோதனை நடத்தி பல கோடி மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
விசாரணை
இந்நிலையில் தீனதயாளிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி யைச் சேர்ந்த சிலைக் கலைக்கூடம் நடத்தி வரும் புஷ்பராஜன் என்பவருக்கும் சிலைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை செய்தனர்.
அவர் அளித்த தகவலின்பேரில் புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப் போலீஸ் படையினர் புதுச்சேரி கோலாஸ் நகரில் 3-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான 11 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டில் தங்கி இருந்த தச்சர் ரஞ்சித்குமார் (39) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘சென்னை யில் கைது செய்யப்பட்ட புஷ்ப ராஜன் அளித்த தகவலின் பேரில் புதுச்சேரியில் சோதனை செய்தோம். நீதிமன்ற அனுமதி பெற்று இந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 11 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட தால் சிலைகளை தற்போது கொண்டுசெல்ல முடியாது. எனவே 26-ம் தேதி (இன்று) சிலைகளை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகள் மதிப்பு ரூ. 50 கோடி அளவுக்கு இருக்கும்'' என்று தெரிவித்தார்.