

சென்னை: சென்னை மாநகரில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் வகையில், போலீஸார் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, தலைமறைவாக உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் திருந்தி வாழப் போவதாக காவல் துறையினரிடம் நன்னடத்தைப் பத்திரம் எழுதிக் கொடுத்து வருகின்றனர். அதன்படி, சென்னையில் 422ரவுடிகள் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.
அவர்கள் திருந்தி வாழ்கிறார்களா அல்லது மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க, அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தனிப்படை போலீஸார் 422 ரவுடிகளைக் கண்காணித்தனர். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறும் அறிவுரைகள் வழங்கினர். மேலும்,19 ரவுடிகளிடம் திருந்தி வாழ்வதற்கான நன்னடத்தை பிணைப் பத்திரம் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர, சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்திய, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர்கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, "சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள், குற்றச் செயல் களில் ஈடுபடுவோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில், ரவுடிகள் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.