

சென்னை: சோழிங்கநல்லூர் - சிறுசேரி சிப்காட்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானத்துக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் முதல்கட்ட கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 வழித்தடங்களில் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில்திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வதுவழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான திட்டப் பணிகள் நடக்கின்றன. தற்போது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் சில இடங்களில் திட்டப் பணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் உள்ளது. சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரிசிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் மாதவரம் முதல் தரமணி வரை (26.7 கி.மீ) சுரங்கப் பாதையாகவும், நேரு நகர் முதல் சிறுசேரி சிப்காட் வரை (19.1 கி.மீ.) உயர்மட்டப் பாதையாகவும் அமைய உள்ளது.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை(16 கி.மீ) உயர்மட்டப் பாதையாகவும், கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை (10.1 கி.மீ.) சுரங்கப் பாதையாகவும் அமைய உள்ளது.
மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் கொளத்தூர் மெட்ரோ சந்திப்பு முதல் வில்லிவாக்கம் மெட்ரோ வரை (5.8 கி.மீ) மட்டும் சுரங்கப் பாதையிலும், மீதமுள்ள வழித்தடம் உயர்மட்டப் பாதையில் இடம்பெற உள்ளது.
பெரும்பாலான இடங்களில் திட்டப் பணிக்காக, ஒப்பந்தம்முடிந்து பணிகள் தொடங்கிவிட்டன. அதேநேரத்தில், மெட்ரோ ரயில்நிலையங்களின் கட்டுமானத்துக்கான ஒப்பந்தம் முடியவில்லை. மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டுமானத்துக்கான ஒப்பந்தம் இன்னும் முடியவில்லை. வழித்தடம் 5-ல் கொளத்தூர் மெட்ரோ சந்திப்பு முதல் வில்லிவாக்கம் மெட்ரோ வரை ஒப்பந்தம்இறுதி செய்யப்படவில்லை.
சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரிவரை உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானத்துக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது என்றனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்பணிகளை வரும் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் பூந்தமல்லி - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வழித்தடம் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இங்கு உயர்மட்ட பாதையில் பணிகளை முடித்து ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.