Published : 29 Aug 2022 06:22 AM
Last Updated : 29 Aug 2022 06:22 AM
சென்னை: மாணவர்கள் மத்தியில் விளையாட்டு செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில், ஒலிம்பிக், பாராலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், காமன்வெல்த் மற்றும்கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, 65 வீரர்கள், வீராங்கனைகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது ஆளுநர் ரவி பேசியதாவது: பதக்கங்களை வென்று மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். உங்களின் கடின உழைப்பு, பெற்றோர், பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. கடந்த 2008-ம் ஆண்டுபீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது சர்வதேச விளையாட்டில் நாம் வெளியில் தெரியாத நிலையில் இருந்தோம். ஆனால், தற்போது விளையாட்டுக்கான உகந்த சூழல் இருப்பதால், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தி, இந்தியாவை விளையாட்டுக்கான நாடாக உயர்த்தியுள்ளனர்.
நிலையான ஒழுக்கம்
கடின உழைப்பு, நிலையான ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு அறிவை புகுத்துதல் ஆகியவையே, நிகரில்லாத விளையாட்டு திறன்களாகும். ‘பிட் இந்தியா’ பிரச்சாரம், யோகாமுதலிய உடல் ஆரோக்கியத்துக்கான நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு முயற்சிகளை பிரதமர் விளையாட்டுக்காக எடுத்து வருகிறார்.
பதக்கங்கள், வெற்றிகள் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தேசத்தை உருவாக்குவதற்கான வழியை இந்த நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் அதிக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதும், அவர்களின் சாதனைகளும் பெண் சமுதாயத்துக்கு புதிய ஆற்றலை உருவாக்கியுள்ளது.
கடின உழைப்பு
விளையாட்டு வீரர்கள் அனைவரும் தொடர்ந்து கடின உழைப்பை வெளிப்படுத்தி, அடுத்தடுத்த சிறந்த நிலைகளை எட்டுவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளை அதிக அளவில் வளர்ப்பதுடன், மாணவர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். இது அடுத்த 25 ஆண்டுகளில், அதாவது சுதந்திர திருநாளின் 100 -வது ஆண்டில் இந்தியாவை விளையாட்டில் விஷ்வகுருவாக மாற்றும்.
இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.
நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல், பத்ம விருதுகளை வென்ற வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT