

சென்னை: இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுவழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.
கரோனா பரவலுக்குபின் நம்நாட்டில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. 2019-ம் ஆண்டில் 75 ஆயிரமாக இருந்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 2021-ல் 24,439 ஆக சரிந்துவிட்டது.
வழிகாட்டுதல்கள்
இதையடுத்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிமையாக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.
இதுதவிர நம்நாட்டின் உயர்கல்வியை உலகமயமாக்க தேசியகல்விக்கொள்கை - 2020-ம்வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களுக்காக 25 சதவீத இடங்களை உருவாக்க அனுமதிக்கப்படும்.
சிறப்பு அம்சங்கள்
இந்த சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வுகள் இருக்காது. வெளிநாட்டு மாணவர் இடங்களில் வேறு யாரையும் சேர்க்கக்கூடாது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய வழிகாட்டுதல்கள் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் தங்கள் கருத்துகளை policyfeedbackugc@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக செப்டம்பர் 5-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.