நவீன கல்வி முறைக்கு உதவும் சோழர் கால கல்வி: பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் புகழாரம்

நவீன கல்வி முறைக்கு உதவும் சோழர் கால கல்வி: பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் புகழாரம்
Updated on
2 min read

நவீன கல்வி முறையை திட்ட மிடுபவர்களுக்கு உதவுகிற வகையில் சோழ மன்னர்கள் தங்களது ஆட்சிக் காலத்திலேயே சிறந்த கல்வி முறையை பின்பற்றியுள்ளனர் என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் என். ராஜேந்திரன் பேசினார்.

காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழக வரலாற்றுத் துறை மற்றும் தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் சோழ மன்னர்கள் காலத்தில் பின்பற்றப்பட்ட கல்வி நடைமுறைகள் (காலம் கி.பி. 850 முதல் 1279 வரை) என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கருத்தரங்க செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதற்கு தலைமை வகித்து துணைவேந்தர் சொ. சுப்பையா பேசியதாவது:

தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் கல்வி முறை சிறப்பாக இருந்துள்ளது. பழமையான மற்றும் பாரம்பரியம் வாய்ந்த கல்வி முறை தற்போது இந்தி யாவில் பின்பற்றப்படும் கல்வி முறையோடு ஒப்பிட்டுப் பார்ப் பதற்கு உறுதுணையாக இருக்கி றது. சோழர் கால கல்வெட்டுகளின் அடிப்படையில் கல்வி வளர்ச்சிக்கு சோழ மன்னர்கள் அளித்த முக்கி யத்துவத்தை அறிய முடிகிறது.

சோழர் காலத்தில் கிராமங்களில் கல்வியை வளர்க்கும் பொருட்டு, கிராம கல்விக் குழுக்கள் அமைக் கப்பெற்று, அதன் உறுப்பினர்கள் உதவியுடன் கிராமத்தில் நிதி திரட்டி அதன் மூலம் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. பாடத்தோடு கலை மற்றும் பண்பாடு குறித்த கல்வியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

சோழர்கள் காலத்தில் கோயில்கள் சிறந்த கல்வி நிலை யங்களாக விளங்கின. அவர்களால் பின்பற்றப்பட்ட கல்வி முறை வரலாற்று அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. கோயில்கள் கல்வி வழங்கும் மையமாக திகழ்ந் ததற்கு கோயில்களில் உள்ள கல்வெட்டுகளே சிறந்த சான்று.

வேலூர் அருகில் உள்ள திருவல்லம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டுகளின்படி 7,000 மாண வர்கள் ஒரே இடத்தில் தங்கி படிக்கக்கூடிய அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சோழ மன்னர்களின் சிறந்த நிர்வாகமும், கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது என்றார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் என். ராஜேந்திரன் பேசியதாவது:

நவீன கல்வி முறையை திட்டமிடுபவர்களுக்கு உதவுகிற வகையில், உலகம் முழுவதற்கும் பயன்படக்கூடிய வகையில், சோழ மன்னர்கள் தங்களது ஆட்சிக் காலத்திலேயே சிறந்த கல்வி முறையை பின்பற்றியுள்ளனர். மாணவர்கள் வரலாற்றை படிக்கும் போது, அனுமானங்களின் அடிப் படையில் மட்டுமல்லாமல், வர லாற்று உணர்வுகளுக்கும் முக்கி யத்துவம் கொடுத்து அவற்றை படிக்க வேண்டும்.

உலகில் உள்ள பழமையான நாகரீகங்களில் இந்திய மற்றும் சீன நாகரிகங்கள் மட்டுமே வரலாற்றை முதலில் எழுதத் தொடங்கின. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரலாற்று கல்வெட்டு ஆதாரங் களில், மூன்றில் ஒரு பகுதி தமிழ கத்தில் உள்ளது. அதில் பெரும் பாலானவை சோழர் காலத்தை சேர்ந்தது.

மிகச் சிறந்த வரலாற்று அறிஞரும், இந்திய வரலாற்றை எழுதியவருமான வின்சென்ட் ஸ்மித், இந்தியாவை ஆண்ட மன்னர்களில் அசோகரையும், அக்பரையும் மட்டுமே பேரரசர்கள் என தனது வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். அதே போன்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ராஜராஜனுக்கு மட்டுமே பேரரசர் ராஜராஜன் என தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இதற்கு காரணம் இவர்களது காலத்தில் அனைத்து துறைகளும் செழிப்புற்று இருந்ததே ஆகும். சோழ மன்னர்கள் காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வாணி பம் சிறப்புற்று விளங்கியது. அதற்கு சோழப் பேரரசில் திறமைமிக்க நிர்வாக அதிகாரிகள் மன்னர்களுக்கு உதவியாக இருந்ததும், சோழ மன்னர்களால் திறமையான ஆட்சியை மக்களுக்கு வழங்க முடிந்ததும், கல்விக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமே காரணங்கள் ஆகும் என்றார்.

கருத்தரங்க மலரை துணை வேந்தர் வெளியிட முதல் பிரதியை என். ராஜேந்திரன் பெற்றுக் கொண் டார். இதில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்னாள் வரலாற் றுத் துறை பேராசிரியர் வி.வைத்தி யநாதன் கௌரவிக்கப்பட்டார்.

மேலும், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் எ.நாராயணமூர்த்தி, கலைப்புல முதன்மையர் கா. மணிமேகலை ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

முனைவர் ஏ.ஆர். சரவணகுமார் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in