உள்ளாட்சித் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வாசன் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2016-ல் தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை இன்று உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மேலும் இந்த தேர்தலை வருகின்ற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கிடையாது. அதே நேரத்தில் தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்த உடனேயே மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் போதிய கால அவகாசம் இல்லாததும், இட ஒதுக்கீடும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பன போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதனை சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை மாநில தேர்தல் ஆணையம் ஏற்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும். தமாகாவைப் பொறுத்த வரையிலே எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.

எனவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கியும், இட ஒதுக்கீடுக் கொள்கையை முறைப்படி பின்பற்றியும், ஜனநாயக முறைப்படியும் தேர்தலை நடத்திட தமிழக தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in