Published : 15 Oct 2016 09:49 AM
Last Updated : 15 Oct 2016 09:49 AM

குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி தேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

கிண்டியில் சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி மோதி, 3 மாணவிகள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். லாரியை வேகமாக இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியத்தின் வியாசர்பாடி நீர் ஏற்றும் நிலையத்திலிருந்து நீர் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த குடிநீர் லாரி ஓட்டுநர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

சென்னை குடிநீர் வாரியத்தில் அனைத்து லாரிகளும் 6 ஆயிரம் லிட்டர் குடிநீரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. சரக்கு லாரிகளைப் போன்று குடிநீர் லாரிகளை இயக்க முடியாது. குடிநீர் லாரி டேங்குகளில் நீர் குறைவாக இருந்தால், லாரியை நிறுத்தும் போது நீர் அழுத்தத்தால், சிறிது தூரம் சென்றுதான் லாரி நிற்கும். இது லாரி ஓட்டுநர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே சாலை காலியாக இருந்தால் 40 கி.மீ வேகத்திலும், நெருக்கடி மிகுந்தசாலைகளில் 30 கி.மீ வேகத் திலும்தான் லாரியை இயக்குவோம்.

ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில், லாரிக்கான மாதத் தவணை, ஓட்டுநர் ஊதியம், கிளீனர் ஊதியம், வாகன பராமரிப்பு செலவு ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தில் ஒரு நடைக்கு ரூ.600 மட்டுமே வழங்கப்படுகிறது. தனியார் குடிநீர் லாரிகள் ரூ.1400 வரை சம்பாதிக்கின்றனர். அதனால் சென்னை குடிநீர் வாரியத்தில் குறைவாக வழங்கப்படும் தொகையை ஈடுகட்ட, அதிக நடைசெல்ல ஓட்டுநர்கள் விரும்புகின்றனர்.

வழக்கமாக தினமும் 6 நடைகள் செல்வோம். சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிலர் 10 நடைகள் வரை செல்வார்கள். அதனால் சிலர் வேகமாக லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர். இப்போது நாங்கள் குடிநீர் விட செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எங்களைக் கொலைகாரர்களைப் போன்று பார்க்கின்றனர். எனவே, குடிநீர் வாரியம், நடைக்கான கட்டணத்தை உயர்த்தி வழங்கி, நாள்ஒன்றுக்கு செல்லும் நடை களின் எண்ணிக்கையை முறைப்படுத்தினால், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக வியாசர்பாடியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனமான ‘தேவை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறும்போது, “குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள், குறிப்பிட்ட சில கி.மீ தூரம் மட்டுமே இயக்கப்படுபவை. இவற்றுக்கு கட்டாயம் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும். குடிநீர் வாரியம் தனது நிபந்தனைகளில், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்திய லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும் விபத்து ஏற்படுத்தினால் லாரியை குடிநீர் வாரியம் கையகப்படுத்திக்கொள்ளும். ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரைக்கும் என்பது போன்ற சில நிபந்தனைகளைச் சேர்க்க வேண்டும். லாரிகளின் வருகை மற்றும் புறப்பாடு போன்றவற்றை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், ஒப்பந்த குடிநீர் லாரிகளால் ஏற்படும் விபத்துகள் குறையும்” என்றார்.

பட்டாளம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் என்பவர் கூறும்போது, “குடிநீர் லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவதுடன், அது தினமும் செயல்படுகிறதா என்பதை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x