

அதிமுகவினர் தமிழர்களின் கலாச்சாரத்தையே சீரழித்துக் கொண்டிருப்பதாக, தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார். மேலும், மதவாதக் கூட்டணியில் பாமக இணைந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் இரா.தாமரைச் செல்வனை ஆதரித்து அவர் இன்று பேசியது:
"திமுக ஆட்சியில் எண்ணற்ற நல்ல திட்டங்கள் தமிழக மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் 96,699 நகரப்புற சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.96.70 கோடி சுழல் நிதி மானியமாக வழங்கப்பட்டது, சிறப்பாகச் செயலாற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது அறிவிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆனால், சுய உதவிக் குழுக்களை உருவாக்குவதற்கு கொடுக்கப்படும் நிதியைக் குறைத்தார் ஜெயலலிதா.
இதை எண்ணிப் பார்த்து, வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஒரு நிலையான மதசார்பற்ற ஆட்சி அமைய திமுகவை ஆதரிக்க வேண்டும்.
ஹெலிகாப்டரில் மேலே வரும் ஜெயலலிதாவை பார்த்து, வணக்கம் வைக்கும் அதிமுக அமைச்சர்களும், வேட்பாளர்களும், அவர் வானில் பறந்து வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டவுடனேயே வணக்கம் செய்ய துவங்கி விடுகின்றனர். அதுவும் அவர் வந்து இறங்கிவிட்டால் கீழே படுத்துகொண்டுதான் வணக்கம் வைக்கிறார்கள். இதுதான் கலாச்சாரமா, தமிழர்களின் கலாச்சாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது நம் தலைவர் கருணாநிதிதான். அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சியில்தான்.
பாமக மீது சாடல்
இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் (அன்புமணி) மதவாத கூட்டணியில் போய் சேர்ந்திருக்கிறார்கள். அதுவும் அதை மெகா கூட்டணி என்கிறார்கள். மெகா கூட்டணி அல்ல. அது, சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் கடந்த முறை நமது கூட்டணியில் இருந்த போது இரண்டு பேர் அமைச்சர்களாக இருந்தனர். அதிலும் இந்த தொகுதியில் நிற்பவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். நாம் ஆட்சியில் இருந்தபோது சில சட்டமன்ற உறுப்பினர்களும், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிலர் இருந்தார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் சிலர் இருந்தார்கள். இதுவரை இந்த மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஒடுக்கபட்ட சமுதாயத்தினருக்கு ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் ஒரு சீட்டாவது வாங்கி கொடுத்திருக்கிறார்களா?" என்றார் ஸ்டாலின்.