

ஆரோக்கியமான வாழ்வுக்கு பாரம்பரிய உணவுகள் அவசியம் என்று மருத்துவர் கு.சிவராமன் வலியுறுத்தினார்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ மற்றும் ஈஸ்டர்ன் நிறுவனம் சார்பில் மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய கருத்தரங்கம் மற்றும் இலவசப் பயிற்சி சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் (தெற்கு) நேற்று நடைபெற்றது. “வீட்டிலே வெள்ளாமை.. விளை யுது ஆரோக்கியம்” என்ற தலைப் பிலான இந்த கருத்தரங்கில் மருத் துவர் கு.சிவராமன், “நஞ்சில்லா உணவு” என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
களைப்பை போக்க நாம் அருந்தும் தேநீர் தொடங்கி அனைத்து விதமான உணவுகளிலும் கண்ணுக்குத் தெரியாத ஏராளமான ரசாயனங்கள் கலந்துள்ளன. நோய்கள் பெருகியதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகளே காரணம். மருத்துவ வளர்ச்சியின் காரணமாக மனிதனின் ஆயுட்காலம் 37 ஆண்டி லிருந்து 63 ஆண்டாக அதிகரித் துள்ளது. இது 80 ஆண்டாக உயர வேண்டும். ஆனால் இன்றைய சூழலைப் பார்க்கும்போது அதற் கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தா விட்டால் வரும் காலத்தில் ஆரோக் கியமான முதுமை இருக்காது. இத்தகைய சூழலில் நாம் சாப் பிடும் உணவு மிகவும் முக்கியம். உணவில் ரசாயனம் சேரும்போது அது நோய்கள் உருவாவதற்கு காரணமாகிறது. நமது பாரம்பரியத் தில் நச்சு இல்லாத ஏராளமான உணவுகள் உள்ளன. பாரம்பரிய உணவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பீட்சா, பர்கர் என்று ஓடிக்கொண் டிருக்கிறோம்.
சாதாரணமாக ஒரு குடும்பத் துக்குத் தேவையான காய்கறி களை, நமது வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம். நாம் ஒருபோதும் மரபை மறந்துவிடக் கூடாது. மரபு களில் உள்ள தவறுகளை, மடமை களை நமது கல்வியறிவால் சீராக்க வேண்டும். முடிந்தவரைக்கும் நமது பாரம்பரிய உணவுகளை, ரசாயனம் கலக்காத உணவுகளை உண்போம்.
இவ்வாறு மருத்துவர் சிவராமன் கூறினார்.
மென்பொருள் பொறியாளரும், இயற்கை வேளாண்மை ஆர்வலரு மான பா.செந்தில்குமார் “ஆரோக் கியம் நமது வீட்டிலே” என்ற தலைப்பில் பேசும்போது, “மரபு என்பது தலைமுறை தலைமுறை யாக பரிசோதிக்கப்பட்டு வரும் ஒன்றாகும். நமக்குத் தேவையான காய்கறிகளை, கீரைகளை வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். கீரை உற்பத்தி மிகவும் சுலபமானது. வீட்டில் காய்கறிகளை உற்பத்தி செய்வது என்பது வெறும் உணவுப் பொருள் உற்பத்தி மட்டுமல்ல மனநிறை வும்கூட. வீட்டுத் தோட்டப் பணி களில் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும்” என்றார்.
கீரை வளர்ப்பு முறை, பஞ்சகாவ்யா உரம், எளிய பூச்சிக்கொல்லி மருந்து, அமிர்தகரைசல் தயாரிப்பு முறை களை எளிமையான முறையில் விளக்கினார். வீட்டுத் தோட்டம், விதை தயாரிப்பு, விதை நேர்த்தி, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பதிலளித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர் களுக்கு மருத்துவர் கு.சிவராமன், ‘தி இந்து’ தமிழ் வர்த்தகப் பிரிவு தலைவர் ஷங்கர் வி.சுப்ரமணியம், வட்டார மேலாளர் எஸ்.வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் காய்கறி செடிகளை வழங்கினர். ஈஸ்டர்ன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிஜு, விற்பனை மேலாளர் சிந்து உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மாடியில் தோட்டம் அமைப்பது தொடர்பான பயிற்சி மற்றும் கருத்தரங்கம் சென்னையை அடுத்த சிறுசேரியில் உள்ள எல் அன்ட் டி ஈடன் பார்க்கிலும் நடைபெற்றது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’, ஈஸ்டர்ன் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் எல் அன்ட் டி ஈடன் பார்க் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் த.செந்தில் குமரன், உறுப்பினர்கள் க.ஈஸ்வரன், அசோகன், சுரேஷ், மகாவீர் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் களுக்கு தக்காளி, கத்தரி, மிளகாய், கீரைச் செடிகள் வழங்கப்பட்டன.