Published : 31 Oct 2016 02:53 PM
Last Updated : 31 Oct 2016 02:53 PM

அஞ்சல்வழி தமிழ் பயிற்றுவிக்கும் திட்டம்: நிதி ஒதுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பாரதியார் சிந்தனையாளர் மன்றம் அறிவிப்பு

பிற மொழியினருக்கு அஞ்சல் வழியில் தமிழ் கற்பிக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது தாமதமாகி வருவதால், அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என பாரதியார் சிந்தனையாளர் மன்றம் அறிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பிற மொழியினருக்கு குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழியில் இந்தி கற்பிக்கப்படுகிறது. இதேபோன்று பிற மொழியினருக்கு குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழியில் தமிழ் கற்பிக்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி பாரதியார் சிந்தனையாளர் மன்றத்தின் பொதுச் செயலர் லட்சுமிநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அஞ்சல் வழியில் தமிழ் கற்பிக்க 12 வாரத்தில் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 22-ம் தேதி உத்தரவிட்டது. இந்த காலக்கெடு முடிந்து பல மாதங்களாகியும் இப்பணிக்கு தேவையான நிதியை தமிழக அரசு இதுவரை ஒதுக்கவில்லை. இதனால் பிற மொழியினருக்கு அஞ்சல் வழியில் தமிழ் கற்பிக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது.

இதையடுத்து அஞ்சல் வழியில் தமிழ் கற்பித்தல் பணிக்காக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ரூ.37.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி ஆர்.லட்சுமி நாராயணன், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மனு அனுப்பினார்.

இதற்கு தமிழ் வளர்ச்சித்துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கி தனி அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. நிதி ஒதுக்குவது இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடம் தகவல் கோரி மற்றொரு மனு அனுப்பப்பட்டது. அதற்கு, பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லெட்சுமி நாராயணன் கூறும்போது, “பாரதியாரின் பிறந்தநாளான வரும் டிசம்பர் 11-ம் தேதிக்குள் அஞ்சல்வழி தமிழ் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இல்லையெனில் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x