

ஜூன் 20-க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் ஜூலை 21-ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகை யிடும் போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
தஞ்சாவூரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணி யரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்துக்கு உரிய பங்கைத்தான் நாம் கேட்கிறோம். தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட சென்று விடக் கூடாது என்ற கர்நாடகம் தனது எல்லைப் பகுதியான பிலிகுண்டு அருகில் ரூ.600 கோடி மதிப்பில் 3 அணைகளை கட்டத் திட்டமிட்டு அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் பெற்றுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் அணைகளைக் கட்ட கர்நாடகம் அடிக்கல் நாட்டி னால், காவிரி உரிமை மீட்புக் குழு மக்களை திரட்டிச் சென்று அந்த அடிக்கல்லை பிடுங்கி எறியும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத் தையும், அதற்குத் துணையாக காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவையும் அமைத்து கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். அதனால், பக்ராநங்கல் அணை யில் செய்ததைப் போல, கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி அணைகளின் நிர்வாகத்தை கையில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு ஜூன் 20-க்குள் காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைக்க வேண்டும். இல்லை என்றால் ஜூலை 21-ல் காவிரி டெல்டா மாவட்ட தலை நகரங்களில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் செயல்பட முடியாத வகையில் முற்றுகைப் போராட்டங்கள் நடைபெறும். ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் மணியரசன்.
முன்னதாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி ப.ஜெகதீசன், தாளாண்மை உழவர் இயக்க நிர்வாகி பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, உழவர் உரிமை இயக்க நிர்வாகி தங்கராசு, தமிழக உழவர் முன்னணி நிர்வாகி பி.ஆறுமுகம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகி பேராசிரியர் த.ஜெயராமன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி ஜெ.கலந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.