மதனை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸார் மாயவித்தை தெரிந்தவர்கள் கிடையாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மதனை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸார் மாயவித்தை தெரிந்தவர்கள் கிடையாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

மந்திரக்கோலைக் காட்டி மதனை ஒரு நிமிடத்தில் ஆஜர்படுத்த போலீஸார் ஒன்றும் மாயாஜால வித்தை தெரிந்தவர்கள் கிடையாது என வேந்தர் மூவீஸ் மதன் மாயமான வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.

தலைமறைவான வேந்தர் மூவீஸ் மதனை கண்டுபிடிக்க அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாகக் கூறி மதன் கோடிக்கணக்கில் மோசடி செய்தது குறித்தும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தனியாக மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை முதன்முதலாக விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.பாரதிதாசன் ஆகி யோர் அடங்கிய அமர்வு, மதனை கண்டுபிடிக்கவும், பண மோசடி குறித்து விசாரிக்கவும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ்ணனை நியமித்திருந்தது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்டோபர் 6-ம் தேதிக்குள் மதனைக் கைது செய்து ஆஜர்படுத்தவில்லை என்றால் சென்னை போலீஸ் ஆணையர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அதிகாரி ராதாகிருஷ்ணன் தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். மனுதாரர் தங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ், ‘‘மதன் மாயமாகி 125 நாட்களுக்கு மேலாகிவி்ட்டது. இதுவரை அவர் எங்குள்ளார்? என்பது குறித்து போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், ‘‘மதனைக் கண்டு பிடித்து ஆஜர்படுத்தினால் மட்டுமே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்கும்” என்றார்.

இதற்கு நீதிபதிகள், “மதனை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய போலீஸார் ஒன்றும் மாயவித்தை தெரிந்த வர்கள் கிடையாது. போலீ ஸாருக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். எனவே, இந்த வழக்கு விசார ணையை வரும் அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளி வைக் கிறோம்’’ என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in