

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப் பட்டிருந்த பள்ளி தாளாளர் சரஸ்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் காசிராமன் தெருவில் இருந்த கிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியாயினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில், பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி உள்ளிட்ட 4 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 2014 ஜூலை 30-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட பள்ளி தாளாளர் சரஸ்வதி (83) திருச்சி யில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவருக்கு கடந்த சில மாதங் களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவ மனையிலும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சரஸ்வதிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரை உடனடியாக சென்னை ராயப் பேட்டையில் உள்ள அரசு மருத் துவமனையில் சேர்க்குமாறு மருத் துவர்கள் ஆலோசனை கூறினர். நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.