

ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுக்குரியது.
பாகிஸ்தானுடன் நடந்த போட்டி என்பதால் இப்போட்டியின் முடிவை வெகு ஆர்வமாக எதிர்பார்த்தேன். இந்திய அணியின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் வெற்றி இலக்கை அடையவேண்டும் என்ற உறுதியோடு விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம். இக்கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த பெருமை.
சாதனை படைத்த ஹாக்கி வீரர்களுக்கும் உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், இந்திய விளையாட்டுத்துறைக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.