

பசும்பொன்னில் உள்ள முத்து ராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது ஜெயந்தி, குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. இங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நாளை அஞ்சலி செலுத்த உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சித் தலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு அக்.28-ம் தேதி ஆன்மிக விழாவாகவும், 29-ம் தேதி அரசியல் விழாவாகவும், 30-ம் தேதி அரசு விழாவாகவும் நடத்தப்படுகிறது.
இதையொட்டி அவரது 109-வது ஜெயந்தி விழா, 54-வது குருபூஜை நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதற்கு நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கியது. நாளை (அக்.30) காலை 6 மணி வரை லட்சார்ச்சனை, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் பால்குடம் எடுத்து வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது. புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன் நேற்று காலை தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று தேவர் சார்ந்த பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் அரசியல் விழா நடத்தப்படுகிறது. நாளை அரசு விழாவும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
அரசு விழா
அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.மணிகண்டன், ஜி.பாஸ்கரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். மாலை 4.30 மணிக்கு அரசு விழா நடைபெற உள்ளது.
பாதுகாப்பு
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி எஸ்.திரிபாதி தலைமையில் ஐ.ஜி.க்கள் எஸ்.முருகன் (தென்மண்டலம்), கே.பெரியய்யா (ஊர்காவல் படை), டேவிட்சன் தேவாசிர்வாதம் (காவல்துறை நலம்), டிஐஜிக்கள் கபில் குமார் சி.சரட்கர் (ராமநாதபுரம்), ஆனந்தகுமார் சோமானி (மதுரை), நாகராஜன் (சேலம்), ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், 13 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 27 உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 கம்பெனி பட்டாலியன் போலீஸ் உட்பட மொத்தம் 7 ஆயிரம் போலீஸார் பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 20 வெடிகுண்டு துப்பறியும் நிபுணர்கள், 10 வெடிகுண்டு துப்பறியும் நாய்கள், 2 ஆளில்லா விமானங்கள் மூலம் 10 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள 7 சோதனைச் சாவடிகள் வெப் கேமரா மூலம் ஆன்லைனில் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தலைவர்கள் வருகை
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, பாஜக சார்பில் பிடி அரசகுமார் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் அக்.30 அன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்