சுப்பிரமணியன் சுவாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

சுப்பிரமணியன் சுவாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
Updated on
1 min read

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று வெளியான அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று, சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் வழக்கம் போல் தனது பணிகளை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

இந்நிலைக்கு மாறாக பா.ஜ.க வின் மூத்த தலைவர் எனக் கூறப்படும் நாடாளுமன்ற மேலவையின் நியமன உறுப்பினராக உள்ள சுப்பிரமணிய சுவாமி, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்தி தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல் படுத்திட வேண்டும் என்றும், சட்டப் பேரவையை முடக்கி வைக்க வேண்டும் என்றும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ஆறு மாத காலத்திற்கு அமுல்படுத்திட வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

சுப்பிரமணிய சுவாமியின் இத்தகைய கருத்து கடும் கண்டனத்திற்குரியது. இக்கருத்து அவருடைய சொந்த கருத்தா? அல்லது பா.ஜ.க வின் அகில இந்திய தலைமையின் கருத்தா? அல்லது நாட்டை ஆளும் பிரதமரின் கருத்தா? அல்லது தமிழ்நாடு பா.ஜ.கா வின் கருத்தா? என்பதனை சம்பந்தப் பட்டவர்கள் தான் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை கலைக்க முற்படுவது ஜனநாயக விரோத செயலாகும். கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, வன்முறையாளர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொணடு தமிழ்நாட்டை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொலுத்தப்பட்டது, தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள், வாகனங்கள் ஒருமாத காலத்திற்கும் மேலாக பெங்களூர் வழியாக செல்ல இயலவில்லை. இதன் காரணமாக ரூ 1200 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இத்தகைய சட்டமீறல்கள் அனைத்தும் நடந்த போது பா.ஜ.க வின் மூத்த தலைவர் எங்கே போனார்?

சுவாமியின் கருத்தை அலட்சியப் படுத்திட முடியாது. பா.ஜ.க வின் தூண்டுதலால் இக்கருத்து வெளிப்படுத்தப் படுகின்றது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பா.ஜ.க முயல்கின்றது.

முதல்வரின் உடல் நிலையைக் காரணம் காட்டி, ஜனநாயக விரோத செயலில் யார் ஈடுபட்டாலும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in