

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகை சரோஜாதேவி அப்போலோ மருத்துவமனைக்கு திங்கட்கிழமை வருகை புரிந்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலைப் பற்றி விசாரித்தார்.
அதற்குப் பிறகு நடிகை சரோஜாதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் பேசினேன். முதல்வர் நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அது எனக்கு நம்பிக்கையாகவும், திருப்திகரமாகவும் இருக்கிறது. அவர் ஒரு சாதனைக்குரிய பெண்மணி. அவருக்கு திருஷ்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆண்டவர் ஒரு சோதனை கொடுத்துள்ளார். அனைத்திலும் இருந்து விடுபட்டு, அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். நாங்கள் இரண்டு பேரும் போனில் பேசி நலம் விசாரித்துக் கொள்வோம். என்னை சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடாது. பெரிய கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்று சொல்வார்'' என்று சரோஜாதேவி தெரிவித்தார்.