Published : 28 Aug 2022 05:02 AM
Last Updated : 28 Aug 2022 05:02 AM

ஓஎன்ஜிசி செயல்பாடுகள் மீதான அணுகுமுறையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம்?

ஓஎன்ஜிசி ஒப்பந்தத் தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி எம்.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி உள்ளிட்டோர்.

திருவாரூர்: காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விவசாயம் பாதிப்படைந்து வருவதாக ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராகப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சிகள், திடீரென தங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும், அதற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அண்மையில் திருவாரூரில் போராட்டம் நடத்தியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி டெல்டாவில், 2012-ம் ஆண்டு மீத்தேன் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

பின்னர், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, 2016-ல் மீத்தேன், ஷேல் காஸ், டைட்காஸ் உள்ளிட்டவற்றை ஹைட்ரோகார்பன் என அறிவித்து, அவற்றை எடுப்பதற்கான அனுமதி பெறும் முறையையும் எளிமைப்படுத்தியது. இவற்றை வெளிக்கொணர ஹைட்ரோ ஃப்ராக்கிங் முறையைப் பயன்படுத்தும்போது வெளியேறும் ரசாயனக் கழிவுகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், இதற்கான எதிர்ப்புகள் தீவிரமடைந்தன.

குறிப்பாக, நெடுவாசல் எண்ணெய் எடுப்புத் திட்டம், திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்களை அறிவித்த மத்திய அரசையும், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் குழாய் உடைந்த நிகழ்வையும் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகளும் முன்னின்று பங்கெடுத்தனர். இதைத் தொடர்ந்து, டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஓஎன்ஜிசி ஆழ்துளைக் கிணற்றில் மீண்டும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மன்னார்குடி வட்டாட்சியர் அழைப்புக் கடிதம் வெளியிட்டதால் எழுந்த பிரச்சினையில், அந்தக் கிணற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். ஆனாலும், ஓஎன்ஜிசி முழுமையாக காலி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இத்தகைய சர்ச்சைகள் அடங்குவதற்குள், ‘கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திவரும் ஓஎன்ஜிசி தொடர்ந்து இயங்க வேண்டும். அதில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓஎன்ஜிசிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும். விவசாயிகளை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணைபோகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை எம்.பி.எம்.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, நாகை முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து மற்றும் தொழிற்சங்கத்தினர், கடந்த ஆக.23-ல் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்த திடீர் மாற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் விளக்கம்

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் கேட்டபோது, அவர் கூறியது: ஓஎன்ஜிசியை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அந்த நிறுவனம் முற்றிலுமாக அகற்றப்பட்டால், அதில் நீண்டகாலமாக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்த பகுதியில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட புதிய திட்டங்களை தொடங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியும் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x